நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகள் நிறைவடைந்த நிலையில், பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை போதைப்பொருட்களை புத்தளம் - வனாத்தவில்லு பகுதியில் உள்ள தகன உலை மையத்தில் இன்று சனிக்கிழமை (27) அழிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில்…

நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகள் நிறைவடைந்த நிலையில், பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை போதைப்பொருட்களை புத்தளம் - வனாத்தவில்லு பகுதியில் உள்ள தகன உலை மையத்தில் இன்று சனிக்கிழமை (27) அழிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் நாடளாவிய ரீதியில் உள்ள நீதிமன்றங்களால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளுக்கமைய அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் பொறுப்பில் இருந்த போதைப்பொருட்களே இன்று அழிக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதன்படி, 13 கிலோகிராம் 22 கிராம் ஐஸ், 2 கிலோகிராம் 30 கிராம் கொக்கெய்ன், 39 கிலோகிராம் 710 கிராம் குஷ், 156 கிராம் ஹெரோயின், 4 கிலோகிராம் 136 கிராம் கஞ்சா மற்றும் ஹஷிஷ், 1 கிலோகிராம் 200 கிராம் மென்டி, 26,262 போதை மாத்திரைகள் என்பன தீயிட்டு அழிக்கப்படவுள்ளன. இந்த பெருந்தொகை போதைப்பொருட்கள், நீர்கொழும்பு நீதிமன்ற வளாகத்திலிருந்து பலத்த பாதுகாப்புடன் புத்தளம் - வனாத்தவில்லு தகன உலை மையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு, அங்கு முழுமையாக எரியூட்டி அழிக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.