பாடசாலை விடுமுறை மற்றும் மாத இறுதி நீண்ட விடுமுறையை முன்னிட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் நுவரெலியாவை நோக்கி வருகை தருகின்றனர். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பல பாடங்கள் நிறைவடைந்…

பாடசாலை விடுமுறை மற்றும் மாத இறுதி நீண்ட விடுமுறையை முன்னிட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் நுவரெலியாவை நோக்கி வருகை தருகின்றனர்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பல பாடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மாத இறுதியில் கிடைத்துள்ள நீண்ட விடுமுறையை குடும்பத்தினருடன் கழிப்பதற்காக பெருமளவானோர் சுற்றுலா பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.

குறிப்பாக நேற்றும் இன்றும்(27) நுவரெலியா மாவட்டத்தை நோக்கி வருகை தந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

இதனால் நுவரெலியாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான டெவோன் மற்றும் சென்கிளையார் நீர்வீழ்ச்சி பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் திரண்டுள்ளனர். நீர்வீழ்ச்சிகளின் அழகை ரசிப்பதற்கும், இயற்கை எழிலை கண்டு மகிழ்வதற்கும் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளால், அப்பகுதிகளில் உள்ள பார்வையாளர் மையங்கள் மற்றும் நடைபாதைகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பியுள்ளன.

சுகாதார நடவடிக்கைகள் தீவிரம் இதேவேளை, சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால், பிரதான வீதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களை அண்மித்த பகுதிகளில் அவ்வப்போது வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

நுவரெலியாவின் குளிர்ச்சியான காலநிலை, இயற்கை எழில் மற்றும் நீர்வீழ்ச்சிகளை பார்வையிடும் ஆர்வம் காரணமாக, இந்த விடுமுறைக் காலத்தில் மேலும் அதிகளவான உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், நுவரெலியாவைச் சூழவுள்ள பகுதிகளில் சிறு வியாபாரிகளின் வர்த்தக நடவடிக்கைகளும் சூடுபிடித்துள்ளன.

குறிப்பாக நடைபாதை வியாபாரிகள், பழங்கள், உணவுப் பொருட்கள், குளிர்பானங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

இதனால், நீண்ட காலமாக சுற்றுலாப் பயணிகளின் வருகையை எதிர்பார்த்திருந்த சிறு வியாபாரிகளுக்கும் இந்த விடுமுறைக் காலம் ஓரளவு வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் வாய்ப்பாக அமைந்துள்ளது.

களைகட்டும் நுவரெலியா இதேவேளை, அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதால், சுற்றுலாத் தலங்களில் சுகாதாரம், போக்குவரத்து ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை உரிய முறையில் பேண வேண்டியதன் அவசியமும் ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில், பாடசாலை மற்றும் மாத இறுதி நீண்ட விடுமுறையை முன்னிட்டு நுவரெலியா தற்போது உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளால் களைகட்டியுள்ளது.

இயற்கையின் அழகை ரசிப்பதற்காக நுவரெலியாவை நோக்கி படையெடுக்கும் இந்த சுற்றுலாப் பயணிகளின் வருகையால், சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய சிறு வியாபாரிகளுக்கும் புத்துயிர் கிடைத்துள்ளது.