மாகாண சபைகளின் அதிகார வரம்புக்குட்பட்ட பாடசாலைகளை “தேசிய பாட சாலைகள்” என்ற பெயரில் மத்திய கல்வி அமைச்சு சுவீகரிப்பதற்குச் சட்ட ரீதியான ஏற்பாடுகள் எதுவும் இடம்பெறவில்லை என சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளா…

மாகாண சபைகளின் அதிகார வரம்புக்குட்பட்ட பாடசாலைகளை “தேசிய பாட சாலைகள்” என்ற பெயரில் மத்திய கல்வி அமைச்சு சுவீகரிப்பதற்குச் சட்ட ரீதியான ஏற்பாடுகள் எதுவும் இடம்பெறவில்லை என சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.

அரசியல் யாப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் படி, கல்வி என்பது மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்பட்ட விடயமாகும். எனினும், யுத்தகாலத்தில் மத்திய கல்வி அமைச்சு அரசியல் யாப்புக்கு முரணாக நாடு முழுவதிலும் ஏறத்தாழ 350 பாடசாலைகளையும் (வடக்கில் 20 பாடசாலைகள்) நிர்வாக வழிகளினூடாகத் தேசிய பாடசாலைகளாகத் தன் கட்டுப் பாட்டின் கீழ் கொண்டு வந்திருந்தது.

அன்றைய கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெருமா சுமாராக 650 பாடசாலைகளைச் சேர்த்து 1000 தேசிய பாடசாலைகள் திட்டத்தை அறிவித்தார்.

இந்த திட்டத்தை ஜி.எல்.பீரிஸ், தினேஷ் குணவர்த்தன ஆகியோரும் தீவிரமாக முன்னெடுத்தனர்.

மேல் முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் மாகாண அதிகாரங்களைப் பறிக்கும் இந்தச் சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிராகக் க. சர்வேஸ்வரன் 2022 மே மாதத்தில் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து, வழக்கின் தொடர்ச்சியாக கடந்த 18.08.2023 மற்றும் 20.02.2024 திகதியிடப்பட்ட சுற்றறிக்கைகள் மூலம், புதிதாகத் தேசிய பாடசாலைகளாக அறிவிக்கப்பட்ட பாடசாலைகளின் பெயர்ப்பலகைகளை அகற்றுமாறும், அதிபர்கள் தேசிய பாடசாலை முத்திரையைப் பயன்படுத்தக்கூடாது என்றும் மத்திய கல்வி அமைச்சு உத்தரவிட்டது.

தடுத்து நிறுத்தப்பட்ட 650 பாடசாலைகளிள் சுவீகரிப்பு 2025 மே 23 அன்று நீதிமன்றத்தில் முன்னிலையான பிரதி சொலி சிட்டர் ஜெனரல்,

"குறிப்பிட்ட அமைச்சரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தத் தற்போது சட்டம் இல்லை” எனச் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளதாக ஒப்புக்கொண்டார். ஏற்கனவே சுவீகரிக்கப்பட்ட பாடசாலைகள் தவிர வேறு எதனையும் சுவீகரிக்கும் உத்தேசம் மத்திய அரசுக்கு இல்லை என்ற எழுத்து மூல உறுதிப்பாட்டையும் சட்டமா அதிபர் நீதி மன்றத்துக்குச் சமர்ப்பித்தார்.

இதற்கமைய, வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரனால் தாக்கல் செய்யப்பட்ட சட்டப் போராட்டம் வெற்றி பெற்று முடிவுக்கு வந்துள்ளதுடன், நாடு தழுவிய ரீதியில் கையகப்படுத்தப்படவிருந்த 650 பாடசாலைகளும் (வடக்கில் 48 பாடசாலைகள்) மத்திய அரசால் பறிக்கப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.