கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச் சென்ற 26 வயதான யுவதியொருவரை கடத்திச் சென்றதாகக் கூறப்படும் அவரது காதலனின் காரை நாரஹேன்பிட்டி பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி நிறுத்தியுள்ளனர். சனிக்கிழமை (29) பிற்பகல் சு…
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச் சென்ற 26 வயதான யுவதியொருவரை கடத்திச் சென்றதாகக் கூறப்படும் அவரது காதலனின் காரை நாரஹேன்பிட்டி பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி நிறுத்தியுள்ளனர்.
சனிக்கிழமை (29) பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் யுவதி ஒருவர் காரில் கடத்திச் செல்லப்படுவதாக பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலின் அடிப்படையில் நாரஹேன்பிட்டி பொலிஸார் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
நாரஹேன்பிட்டியிலிருந்து நாவல நோக்கிப் பயணித்த காரை நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவிட்ட போதிலும், சாரதி அதனை நிறுத்தாமல் தொடர்ந்து செலுத்திச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து நாரஹேன்பிட்டி–நாவல வீதியில் மீண்டும் காரை நிறுத்துமாறு பொலிஸார் சமிக்ஞை செய்துள்ளனர். எனினும், அந்த உத்தரவையும் மீறி கார் தொடர்ந்து சென்றதால், பொலிஸார் காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி அதனை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன்போது காரைச் செலுத்திய நபர் வாகனத்தை கைவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். பின்னர் பொலிஸார் மேற்கொண்ட சோதனையில், காருக்குள் 26 வயதான யுவதி ஒருவர் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளின்போது, குறித்த யுவதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு அருகில் வைத்து கடத்தப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும், காரைச் செலுத்தியவர் குறித்த யுவதியின் காதலன் என்பதும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இருவரும் மாத்தறை, வெலிகமை மற்றும் மிதிகம பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாலி பீடத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக யுவதி தனது குடும்பத்தினருடன் மாநாட்டு மண்டபத்திற்கு வந்திருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தனது காதலனுக்கு தெரியாமல் யுவதி பட்டமளிப்பு விழாவுக்கு வந்திருந்ததாகவும், அவர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியது யுவதியின் தந்தை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட யுவதி கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் இன்று பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
குறித்த கார் கடத்தலை மேற்கொண்டதாகக் கூறப்படும் இளைஞருக்கு சொந்தமானது எனவும், அந்த காரை யுவதியின் தந்தையே பட்டமளிப்பு விழாவுக்கு ஓட்டிச் சென்றதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், தப்பிச் சென்ற சந்தேகநபர் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை தொடர்பான குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர் எனவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தப்பிச் சென்ற சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கொழும்புக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஷாந்த சொய்சாவின் மேற்பார்வையில், கொழும்பு தெற்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூஷன் சூரியபண்டார உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.












