தூரப் பயணங்களின்போது பஸ்கள் நிறுத்தும் சில உணவகங்களில் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் சுகாதாரம் தொடர்பில் தொடர்ந்து முறைப்பாடுகள் பதிவாகி வருவதால், அவ்வாறான உணவகங்களைத் தவிர்க்குமாறு, நுகர்வோர் விவகார அதிகார சபை, பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த உணவகங்களின் உணவுத்…

தூரப் பயணங்களின்போது பஸ்கள் நிறுத்தும் சில உணவகங்களில் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் சுகாதாரம் தொடர்பில் தொடர்ந்து முறைப்பாடுகள் பதிவாகி வருவதால், அவ்வாறான உணவகங்களைத் தவிர்க்குமாறு, நுகர்வோர் விவகார அதிகார சபை, பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த உணவகங்களின் உணவுத் தரம் மற்றும் சுகாதார நிலைமைகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவற்றில் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.

சில உணவகங்களில் பழுதடைந்த உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதுடன், அவை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதும் தொடர்ந்து அவதானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இவ்வாறான உணவகங்களில் உணவு மற்றும் பானங்களை கொள்வனவு செய்வதைத் தவிர்ப்பதே அவற்றுக்கு பொதுமக்கள் வழங்கக்கூடிய சிறந்த தண்டனையாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும், தூரப் பயணம் மேற்கொள்ளும் மக்கள், இயன்றவரை வீட்டிலிருந்தே உணவு மற்றும் குடிநீரை எடுத்துச் செல்வது பாதுகாப்பானது என்றும் அசேல பண்டார அறிவுறுத்தியுள்ளார்.