யாழ்ப்பாண மாவட்ட சுற்றுலா அபிவிருத்தி தொடர்பான முன்னேற்றக் கூட்டம் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் கௌரவ (பேராசிரியர்) ருவான் ரணசிங்க அவர்களின் தலைமையில், நேற்று (04.08.2026) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதன் போது கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் அவர்கள், யாழ்ப்பாணம் உள்ளிட்ட வ…

யாழ்ப்பாண மாவட்ட சுற்றுலா அபிவிருத்தி தொடர்பான முன்னேற்றக் கூட்டம் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் கௌரவ (பேராசிரியர்) ருவான் ரணசிங்க அவர்களின் தலைமையில், நேற்று (04.08.2026) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதன் போது கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் அவர்கள், யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணங்களில் சுற்றுலாத்துறையை விரிவுபடுத்துவதற்கு சிறிய அளவிலான திட்டங்கள் மாத்திரம் போதாது என்றும், பெரிய முதலீடுகள் மற்றும் நீண்டகால அபிவிருத்தித் திட்டங்கள் அவசியம் என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார். மேலும், இலங்கைக்கு சர்வதேச ரீதியில் 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ள நிலையில், யாழ்ப்பாணத்திற்கு வந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 53,000 மட்டுமே. இந்த நிலைமையை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை நாம் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இந்த ஆண்டு 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைப்பதே இலக்காகக் கொண்டுள்ளதாகவும், உலக சுற்றுலாத்துறை வேகமாக வளர்ச்சி பெற்று வரும் நிலையில், யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளும் அந்த வளர்ச்சியின் முழுமையான பயனைப் பெற வேண்டும் என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார். உலகளவில் சுற்றுலாத்துறை மிக வேகமாக முன்னேறி வருவதாகவும், புதிய விமான சேவைகள் ஆரம்பிக்கப்படுவதுடன், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்த பிரதி அமைச்சர், வடக்கு பிராந்தியத்தின் சுற்றுலா வளங்களை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். ஒரு பூங்கா அல்லது சிறிய கட்டுமானத் திட்டம் ஒன்றை அமைப்பதன் மூலம் மட்டும் பொருளாதார மாற்றத்தை உருவாக்க முடியாது. பெரிய அளவிலான முதலீடுகள், தரமான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஒருங்கிணைந்த திட்டங்கள் அவசியம் எனவும் பிரதி அமைச்சர் வலியுறுத்தினார். யாழ்ப்பாணக் கோட்டை, கடற்கரை பகுதிகள் மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் சுத்தமாகவும் அழகாகவும் பராமரிக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். சுற்றுலாப் பயணிகள் அசுத்தமான சூழலுக்கு வரமாட்டார்கள். நாம் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும் அதேவேளை, சுற்றுச்சூழல் பராமரிப்பிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தார். கடல் சுற்றுலா, கப்பல் சுற்றுலா (Cruise Tourism) போன்ற புதிய வாய்ப்புகளை பயன்படுத்துவதன் மூலம் வடக்கு மாகாணத்தில் வேலைவாய்ப்புகள் மற்றும் வெளிநாட்டு வருமானத்தை அதிகரிக்க முடியும் என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார். கனடா உள்ளிட்ட நாடுகளில் உள்ள முதலீட்டாளர்கள் மற்றும் புலம்பெயர் சமூகத்தினருடன் சுற்றுலா முதலீடுகள் தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார். மேலும், சுற்றுலாத்துறையில் ஈடுபடும் உள்ளூர் மக்களின் திறன்களை மேம்படுத்துவது அவசியம் என்றும், விருந்தினர் இல்லங்கள் மற்றும் வீட்டுத் தங்குமிடங்களை நடத்துபவர்களுக்கு சர்வதேச தரத்திலான சேவைகளை வழங்குவதற்கான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் பிரதி அமைச்சர் கூறினார். சுற்றுலாப் பயணிகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யக்கூடிய தரமான சேவைகளை வழங்குவதற்கான திறனை நமது சமூகங்களில் உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். “Clean Sri Lanka” திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தீவுகளை சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலையான சுற்றுலா மையங்களாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார். வடக்கு மாகாணம் சுற்றுலா மற்றும் உட்கட்டமைப்பு முதலீடுகளுக்கான முக்கிய பிராந்தியமாக மாற வேண்டும். பல ஆண்டுகளாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவது எமது பொறுப்பு எனவும் தெரிவித்தார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் முக்கியமான சில பெரிய திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தினால், வடக்கு மாகாணத்தில் மிகப்பெரிய பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.