சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் (பீஃபா) உலகக் கிண்ணத் தொடரின் குழு ஜேயில் ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்ற லீக் போட்டியில், நட்சத்திர வீரர் லியனல் மெஸ்ஸியின் வரலாற்றுச் சாதனை கோலின் உதவியுடன் ஜோர்தான் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டீனா அணி வீழ்த்தியுள்ளது. ஏற்கெனவே அடுத்…

சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் (பீஃபா) உலகக் கிண்ணத் தொடரின் குழு ஜேயில் ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்ற லீக் போட்டியில், நட்சத்திர வீரர் லியனல் மெஸ்ஸியின் வரலாற்றுச் சாதனை கோலின் உதவியுடன் ஜோர்தான் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டீனா அணி வீழ்த்தியுள்ளது.

ஏற்கெனவே அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்திருந்த ஆர்ஜென்டீனா அணியின் பயிற்சியாளர் லியனல் ஸ்கலோனி, கடந்த போட்டியில் விளையாடிய வீரர்களில் ஒன்பது மாற்றங்களை மேற்கொண்டு இப்போட்டியில் மாற்று வீரர்களுக்கு அதிக வாய்ப்பளித்தார். எனினும், ஜியோவனி லொ செல்சோ, லொட்டரோ மார்டினெஸ் மற்றும் மாற்று வீரராகக் களம் புகுந்த லியனல் மெஸ்ஸி ஆகியோரின் கோல் வேட்டையினால் ஆர்ஜென்டீனா தனது வெற்றியைத் தக்கவைத்துக் கொண்டது. ஆர்ஜென்டீனா அணி அடுத்த சுற்றில் கேப் வேர்ட் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

லொ செல்சோ, மார்டினெஸின் ஆரம்பக்கட்ட கோல்கள்:

போட்டியின் ஆரம்பம் முதலே ஆர்ஜென்டீனா அணி ஆதிக்கம் செலுத்தியது. போட்டியின் 19ஆவது நிமிடத்தில் ஆர்ஜென்டீனாவின் லொ செல்சோவை, ஜோர்தான் வீரர் முஹன்னத் அபுதாஹா வீழ்த்தியதால் ஆர்ஜென்டீனாவுக்கு 20 மீற்றர் தூரத்தில் பிறீ கிக் வாய்ப்புக் கிடைத்தது.

லொ செல்சோவின் அசாத்திய கோல்: இந்த பிறீ கிக் வாய்ப்பை உதைத்த லொ செல்சோ, ஜோர்தானின் தற்காப்பு சுவரைத் தாண்டி பந்தை வளைத்து உதைத்து வலையின் எதிர்புற மூலைக்குள் செலுத்தி ஆர்ஜென்டீனாவுக்கு 1-0 என முன்னிலையைப் பெற்றுக் கொடுத்தார்.

மார்டினெஸின் பெனால்டி கோல்: இதன் பின்னர் ஆர்ஜென்டீனாவின் லியான்ட்ரோ பரேடெஸை, ஜோர்தான் வீரர் நிசார் அல்ரஷ்தான் தலையில் உதைத்ததால், காணொளி உதவி மத்தியஸ்தர் பரிசோதனைக்கு பின் மத்தியஸ்தர் பெனால்டி வாய்ப்பை வழங்கினார். போட்டியின் 31ஆவது நிமிடத்தில் கிடைத்த இந்த வாய்ப்பை மார்டினெஸ் மிகச் சரியாகப் பயன்படுத்தி ஆர்ஜென்டீனாவின் இரண்டாவது கோலைப் பதிவு செய்தார்.

ஜோர்தானின் பதில் கோலும் மெஸ்ஸியின் வரலாற்று சாதனையும்:

இரண்டாம் பாதியின் 55ஆவது நிமிடத்தில் ஜோர்தான் அணியின் அணித்தலைவர் எஹ்சான் ஹத்தாத் கொடுத்த பந்தைப் பெற்று, மாற்று வீரராகக் களம் புகுந்த மூஸா அல்தாமரி ஆர்ஜென்டீனாவின் வலையை நோக்கி உதைத்து ஒரு கோல் அடித்தார். நடப்பு உலகக் கிண்ணத் தொடரில் ஆர்ஜென்டீனாவின் கோல்காப்பாளர் எமிலியானோ மார்டினெஸை தாண்டி அடிக்கப்பட்ட முதலாவது கோல் இதுவாகும்.

மெஸ்ஸியின் உலக சாதனை: போட்டியின் 60ஆவது நிமிடத்தில் ரசிகர்கள் எழுப்பிய பலத்த ஆரவாரத்திற்கு மத்தியில் மெஸ்ஸி மாற்று வீரராகக் களம் புகுந்தார். போட்டியின் 80ஆவது நிமிடத்தில் மெஸ்ஸியை ஜோர்தான் வீரர்கள் வீழ்த்தியதால் ஆர்ஜென்டீனாவுக்குப் பிறீ கிக் வாய்ப்புக் கிடைத்தது. 25 மீற்றர் தூரத்திலிருந்து மெஸ்ஸி அடித்த லோ பிறீ கிக் ஜோர்தான் தற்காப்புச் சுவரைத் தாண்டி வலைக்குள் புகுந்தது.

இதன் மூலம் உலகக் கிண்ண வரலாற்றில் தொடர்ச்சியாக ஏழு போட்டிகளில் கோல் அடித்த உலகின் முதலாவது வீரர் என்ற அசாத்திய வரலாற்றுச் சாதனையை லமெஸ்ஸி படைத்தார். பிரான்சின் ஜஸ்ட் ஃபொன்டைன் மற்றும் பிரேசிலின் ஜெய்ர்சின்ஹோ ஆகியோரின் சாதனைகளை முறியடித்து மெஸ்ஸி இப்புதிய சாதனையைப் பதிவு செய்தார். இறுதியில் ஆர்ஜென்டீனா அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றியைத் தன்வசப்படுத்தியது.