சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளன (பீஃபா) உலகக் கிண்ணத் தொடரில், வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியை விளையாட்டு உலகம் சந்தித்துள்ளது. 4 முறை சம்பியனான ஜேர்மனியை, வீழ்த்தி பராகுவே இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கு முன்னேறி வரலாற்று சாதனை படைத்துள்ளது. நிர்ணயிக்கப்பட்…

சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளன (பீஃபா) உலகக் கிண்ணத் தொடரில், வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியை விளையாட்டு உலகம் சந்தித்துள்ளது. 4 முறை சம்பியனான ஜேர்மனியை, வீழ்த்தி பராகுவே இறுதி 16 அணிகளுக்கான சுற்றுக்கு முன்னேறி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிட நேரமும், அதனைத் தொடர்ந்த கூடுதல் நேர முடிவிலும் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்ததை அடுத்து, வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்டி பயன்படுத்தப்பட்டது.

போட்டியின் முக்கிய தருணங்கள் மற்றும் சுவாரசியமான புள்ளிவிவரங்கள்

அதிரடி ஆட்டமும் ஜேர்மனியின் ஆதிக்கமும்: ஜேர்மனி அணியின் பயிற்சியாளர் ஜூலியன் நாகெல்ஸ்மேன், ஜேர்மனிக்காக தொடரில் அதிக கோல் அடித்த டெனிஸ் உன்டாவ்வுக்கு முதல் முறையாக ஆரம்ப வரிசையில் வாய்ப்பளித்து அதிரடியான வியூகத்துடன் களம் இறங்கினார்.

நம்பமுடியாத பந்துப் பரிமாற்ற சாதனை: போட்டிதொடங்கியதில் இருந்தே ஜேர்மனி பந்தை முழுமையாக தன் வசம் வைத்திருந்தது. போட்டியின் 35ஆவது நிமிடத்தில் ஜேர்மனி 244 பந்துப் பரிமாற்றங்களைச் செய்திருந்தபோது, பராகுவே வெறும் 31 பந்துப் பரிமாற்றங்களை மட்டுமே செய்திருந்தது.

வரலாறு காணாத முதல் பாதி: முதல் பாதி முடிவில் ஜேர்மனி தனது எதிரணியை விட 253 பந்துப் பரிமாற்றங்கள் அதிகமாக செய்திருந்தது. உலகக் கோப்பை வரலாற்றில் இத்தனை பாஸ்கள் அதிகமாக செய்தும், முதல் பாதியில் ஒரு அணி பின்தங்கியிருப்பது இதுவே முதல் முறை.

பராகுவேயின் வரலாற்று கோல்: போட்டியின் 42ஆவது நிமிடத்தில், வாயை மூடிக் கதைத்ததால் தடைக்குப் பின் அணிக்குத் திரும்பிய மிகேல் அல்மிரோன் வலது பக்கவாட்டில் இருந்து வேகமாக பந்தை கடத்தி வர, ஜூலியோ என்சிசோ அதனை மிக அழகாக தலையால் முட்டி கோலாக மாற்றினார். உலகக் கிண்ண விலகல் முறையிலான போட்டி வரலாற்றில் பராகுவே அணி பதிவு செய்த முதல் கோல் இதுவாகும்.

மீண்டு வந்த ஜேர்மனி: இரண்டாவது பாதி தொடங்கிய 9 நிமிடங்களில் (54-வது நிமிடத்தில்) புளோரியன் ரிட்ஸ் கொடுத்த பந்தை ஹை ஹவேர்ட்ஸ் தலையால் முட்டி கோலாக்கி போட்டியை 1-1 என சமநிலைக்கு கொண்டு வந்தார்.

காணொளி உதவி மத்தியஸ்தர் கொடுத்த ஏமாற்றம்: கூடுதல் நேரத்தின் 102ஆவது நிமிடத்தில் ஜொனதன் தா மூலையுதை மூலம் வந்த பந்தை தலையால் முட்டி கோல் அடித்தார். ஆனால், நீண்ட காணொளி உதவி மத்தியஸ்தர் பரிசோதனைக்குப் பிறகு, கோல் காப்பாளரை தள்ளி விட்டதாகக் கூறி அந்த கோல் மத்தியஸ்தரால் நிராகரிக்கப்பட்டது ஜேர்மனிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

பெனால்டி திரில்லர்: தகர்க்கப்பட்ட ஜேர்மனியின் அசைக்க முடியாத சாதனை

உலகக் கிண்ண வரலாற்றில் இதற்கு முன்பு ஜேர்மனி அணி பங்கேற்ற எந்தவொரு பெனால்டியிலும் தோல்வியடைந்ததே இல்லை என்ற அசைக்க முடியாத சாதனையைக் கொண்டிருந்தது. அச்சாதனை இன்று பராகுவேயால் சுக்குநூறாக்கப்பட்டது.

ஜேர்மனி தரப்பில் நட்சத்திர வீரர்கள் ஹவேர்ட்ஸ், நிக் வோல்டமேட் மற்றும் தா ஆகியோர் தங்களது வாய்ப்புகளை கோலாக மாற்றத் தவறினர். பராகுவே அணியும் ஆரம்பத்தில் இரண்டு வாய்ப்புகளை கோட்டைவிட்டதால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

இறுதியில், பராகுவேயின் ஜோஸ் கனாலே எவ்வித பதற்றமுமின்றி மிகத் துல்லியமாக பந்தை வலைக்குள் தள்ளி, தனது அணியின் வரலாற்று வெற்றியை உறுதி செய்தார். இந்த வெற்றியைத் தொடர்ந்து மைதானத்தில் பராகுவே ரசிகர்கள் மற்றும் வீரர்கள் மட்டற்ற மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துக் கொண்டாடினர்.

அடுத்த சுற்று சவால்: இந்த அசாத்திய வெற்றியின் மூலம் குதூகலமடைந்துள்ள பராகுவே அணி, அடுத்த சுற்றில் பலம் வாய்ந்த பிரான்ஸ் அல்லது சுவீடன் அணியை எதிர்கொள்ளவுள்ளது.