சீனத் தலைநகரமாக பீஜிங்கில் மிக உயரமான 109 மாடி 'சிடிக் டவர்' (CITIC Tower - China Zun) கட்டடத்தின் மீது வெள்ளிக்கிழமை (26) சிறிய ரக விமானம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலகிலேயே மிக பலத்த பாதுகாப்பு கொண்ட நகரங்களில் ஒன்றான பீஜிங்கின் மத்…
சீனத் தலைநகரமாக பீஜிங்கில் மிக உயரமான 109 மாடி 'சிடிக் டவர்' (CITIC Tower - China Zun) கட்டடத்தின் மீது வெள்ளிக்கிழமை (26) சிறிய ரக விமானம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலகிலேயே மிக பலத்த பாதுகாப்பு கொண்ட நகரங்களில் ஒன்றான பீஜிங்கின் மத்திய தொழில் மாவட்டத்தில் (CBD) இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. கட்டடத்தில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டதுடன் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள், நோயாளர் காவு வண்டி மற்றும் பொலிஸார் மீட்பு பணிகளுக்காக சென்றுள்ளனர். விபத்துக்குள்ளான விமானம், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'சன்வர்டு SA 60L அரோரா' (Sunward SA 60L Aurora) என்ற விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குக்கான சிறிய ரக விமானம் ஆகும். இது, விமான ஓட்டுநர் பயிற்சி மற்றும் வான்வழிப் புகைப்படம் எடுக்கும் உள்ளூர் நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமானது. 'Shifosi' விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம், தனது வழக்கமான பாதையிலிருந்து முற்றிலும் விலகிச் சென்றுள்ளதாக 'ஃப்ளைட் ரேடார் 24' தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. பீஜிங் நகருக்குள் ட்ரோன்கள் மற்றும் விமானங்கள் பறக்க கடுமையான கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், இந்தச் சிறிய விமானம் எவ்வாறு 20 நிமிடங்கள் வான்வெளியில் பறந்து இந்த முக்கிய பகுதிக்குள் நுழைந்தது என்பது குறித்து சீன அதிகாரபூர்வ அமைப்புகளிடமிருந்து இன்னும் முறையான விளக்கங்கள் ஏதும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

