பூட்டானில் நடைபெறும் விழிப்புணர்வு உணவு முறைமைகள் பற்றிய உலக உச்சிமாநாட்டில் (Global Conscious Food Systems Summit - GCFSS) கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்ற பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, 2026 ஓகஸ்ட் 31 ஆம் திகதி பூட்டானின் பாரோ சர்வதேச விமான நிலையத்தைச் செ…

பூட்டானில் நடைபெறும் விழிப்புணர்வு உணவு முறைமைகள் பற்றிய உலக உச்சிமாநாட்டில் (Global Conscious Food Systems Summit - GCFSS) கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்ற பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, 2026 ஓகஸ்ட் 31 ஆம் திகதி பூட்டானின் பாரோ சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.

அங்குப் பூட்டான் பிரதமர், பூட்டானின் வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வர்த்தக அமைச்சர், கல்வி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர், பங்களாதேஷுக்கான இலங்கைத் தூதுவர், இலங்கைக்கான பூட்டான் தூதுவர் மற்றும் பூட்டான் அரசாங்கம், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் (UNDP) ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள் பிரதமரை மிகுந்த பாசத்துடன் வரவேற்றனர்.

விழிப்புணர்வு உணவு முறைமைகள் பற்றிய உலக உச்சிமாநாடு (Global Conscious Food Systems Summit - GCFSS) 2026 ஓகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 04 வரை பூட்டானில் நடைபெறவுள்ளதுடன், அதில் நிலைபேறான தன்மை, புரிந்துணர்வு மற்றும் மீளுற்பத்தி உணவு முறைமைகளை மேம்படுத்துதல், விழுமியங்கள், கலாச்சாரம், ஆன்மீகம் மற்றும் உளவியல் ரீதியான மாற்றம் குறித்துக் கவனம் செலுத்தப்பட இருக்கின்றது.

"உணவு முறைமைகள் மாற்றத்தின் இதயத்தை இயங்கச்செய்தல்" (Activating the Heart of Food Systems Transformation) எனும் தலைப்பின் கீழ் பூட்டான் அரசாங்கம், விழிப்புணர்வு உணவு முறைமைகள் கூட்டணி (CoFSA) மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் (UNDP) என்பன இணைந்து இந்த உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன. 2026 செப்டம்பர் 01 ஆம் திகதி டுங்கார் ட்சோங்கில் (Dungkar Dzong) நடைபெறவுள்ள விழிப்புணர்வு உணவு முறைமைகள் பற்றிய உலக உச்சிமாநாட்டின் (Global Conscious Food Systems Summit - GCFSS) ஆரம்பப் பொது அமர்வில் பிரதமர் கலந்துகொள்ளவுள்ளதுடன், "நெருக்கடிகளை எதிர்கொள்வதற்காக விழிப்புணர்வுடன் எழுச்சி பெறுதல்" (Rising to the Moment: Igniting Consciousness to Address the Polycrisis) எனும் தலைப்பில் பிரதமர் முதன்மை உரையாற்றவுள்ளார்.

அத்தோடு, இவ்விஜயத்தின்போது பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பூட்டான் பிரதமருடனும், கல்வி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சருடனும் இருதரப்புச் சந்திப்புகளை நடத்துவதற்கும், உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளும் ஐக்கிய நாடுகளின் முன்னாள் பொதுச்செயலாளர் உள்ளிட்ட வெளிநாட்டு உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

நிலையான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் மக்கள் மையப்படுத்தப்பட்ட உணவு முறைமைகள் தொடர்பில் இலங்கையின் கருத்துகளையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்வதற்கும், இலங்கைக்கும் பூட்டானுக்கும் இடையில் நிலவும் நீண்டகாலச் சுமுகமான உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கும் இந்த உச்சிமாநாடு சிறந்ததொரு வாய்ப்பாக அமையும்.