பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடலில் ஜனாதிபதி பணிப்புரை பிரதேச ரீதியாக சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை பெற்றுக் கொள்ளும் வகையில், பிரதேச நிர்வாக அலகுகளை அபிவிருத்தி அலகுகளாக மாற்றுவதற்கான திட்டத்தை தயா…

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடலில் ஜனாதிபதி பணிப்புரை

பிரதேச ரீதியாக சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை பெற்றுக் கொள்ளும் வகையில், பிரதேச நிர்வாக அலகுகளை அபிவிருத்தி அலகுகளாக மாற்றுவதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இந்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள நிர்வாக முறைமைக்கு பல தசாப்தங்கள் கடந்திருந்தாலும் மக்களின் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்கவில்லை என்று சுட்டிக் காட்டிய ஜனாதிபதி, சிறிய திருத்தங்களுடன் நிலவும் முறையையே தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடிந்தாலும், இந்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு முழுமையான மாற்றமே என்பதையும் இங்கு சுட்டிக் காட்டினார்.விசேட கவனம்

அந்த விடயத்தை ஒரே தடவையில் செய்ய முடியாது என்றாலும், நிர்வாகத் துறையில் அது குறித்த ஒரு கருத்தாடலை ஏற்படுத்தி அதற்கு அடித்தளம் இடுவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி மேலும் சுட்டிக் காட்டினார்.

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு 2026 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகளின் கீழ் செயற்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பற்றிய கலந்துரையாடலில் நேற்று (31) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைக் குறிப்பிட்டார்.

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் செயற்படும் பொது நிர்வாகப் பிரிவு, உள்நாட்டலுவல்கள் பிரிவு மற்றும் உள்ளூராட்சிப் பிரிவு என்பவற்றுக்காக 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 60,430.04 மில்லியன் ரூபா மூலதனச் செலவுகள் மற்றும் 706,226.83 மில்லியன் ரூபா மீண்டெழும் செலவுகளின் கீழ் செயற்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் இங்கு விரிவாக ஆராயப்பட்டன.

அரச நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் மூலம் மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளில் டிஜிட்டல் தொழில்நுட்பம் ஊடாக வழங்கக்கூடிய சேவைகள் குறித்து எதிர்வரும் சில மாதங்களுக்குள் ஆராய்ந்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி இங்கு அறிவுறுத்தினார்.

அம்பாறை, மட்டக்களப்பு, கேகாலை, பொலன்னறுவை ஆகிய மாவட்ட செயலக வளாகங்களில் மேற்கொள்ளப்படும் நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் களுத்துறை, பிடபெத்தர, அகுணுகொலபெலஸ்ஸ, இரத்மலானை, கோட்டை மற்றும் கொலன்னாவை உள்ளிட்ட பிரதேச செயலகங்களின் நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

நாடு முழுவதும் தற்போது 2,000க்கும் அதிகமான குறைவான பயன்பாட்டில் உள்ள கட்டிட நிர்மாணப் பணிகள் காணப்படுவதாக நிதி அமைச்சின் அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டியதுடன், தற்போதைய அனைத்து நிர்மாணங்களின் தேவைகள் குறித்தும் முறையான ஆய்வு ஒன்றை மேற்கொண்டு, அவசியமான நிர்மாணங்களுக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிப் பிரிவின் கீழ் அரசாங்க நிதிகள் மற்றும் வெளிநாட்டு உதவிகளுடன் செயற்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், கொழும்பு பெருநகர கழிவுநீர் முகாமைத்துவத் திட்டம் தொடர்பான பணிகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. 2015 ஆம் ஆண்டு முதல் காலத்திற்குக் காலம் செயற்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம் மற்றும் கொழும்பு மாநகரசபை எல்லைப் பிரதேசத்திற்கு உரிய ஒட்டுமொத்த வடிகாலமைப்புக்கள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களும் ஒன்றிணைந்து கலந்துரையாடி ஒரு திட்டத்தை தயாரிக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் செயற்பட்டு வரும் 1927 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட கடன் அபிவிருத்தி நிதியம் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட்டது.

உள்ளூராட்சி மன்றங்களுக்கு உரிய கிராமிய சிறு பாலங்கள் அபிவிருத்தித் திட்டங்களின் இந்த வருடத்தின் முன்னேற்றமும் இங்கு மீளாய்வு செய்யப்பட்டதுடன், கிராமிய சிறு பாலங்களின் அபிவிருத்திக்காக 2026/2029 ஆம் ஆண்டுகாலப் பகுதிக்கு 6,793 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், அதன்படி, 2026 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட 1,050 மில்லியன் ரூபா ஒதுக்கீடுகளின் கீழ் செயற்படுத்தப்படும் திட்டங்களில் 29% முன்னேற்றம் அடையப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது. இத்திட்டம் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் தேவைகளைக் கருத்திற்கொண்டு கிராமிய பாலங்களின் நிர்மாணத் திட்டங்களை மிகவும் பயனுள்ள வகையில் செயற்படுத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

மேலும், ஓய்வூதியத் திணைக்களம் மற்றும் பதிவாளர் ஜெனரல் திணைக்களத்தின் பணிகள் தொடர்பாகவும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், தற்போது 750,000 அளவிலானோர் ஓய்வூதிய உரிமையைப் பெற்று வருவதாகவும் இங்கு தெரவிக்கப்பட்டது.

அமைச்சர்களால் உத்தியோகபூர்வ வதிவிடங்களாகப் பயன்படுத்தப்பட்டு வந்த பங்களாக்கள் மற்றும் வீடுகளை பொருளாதார ரீதியில் பயனுள்ள பணிகளுக்காக ஈடுபடுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள திட்டத்தின் முன்னேற்றத்தினையும் ஆராய்ந்த ஜனாதிபதி, அந்த வளங்களிலிருந்து முறையான பயன்களைப் பெற்றுக் கொள்வதற்காக அந்தப் பணிகளை விரைவுபடுத்துமாறும் அறிவுறுத்தினார்.

உள்ளூராட்சி மன்றங்களின் பணிகளை முன்னெடுத்துச் செல்லும் போது எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், இயந்திர உபகரணங்களைப் பெற்றுக்கொள்ளுதல், வருமானம் ஈட்டல் பணிகளுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. ஏனைய பொது சேவைகளின் போது பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வழங்கப்படுகின்ற பங்களிப்பினை மேலும் முறைமைப்படுத்துவது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டதுடன், உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தேவையான பொது வசதிகளை வழங்குதல் மற்றும் புதிதாக இணைத்துக் கொள்ளப்படும் அதிகாரிகளுக்குத் தேவையான பயிற்சியினை வழங்குதல் உள்ளிட்ட செயற்பாடுகளை மிகவும் பயனுள்ள வகையில் முன்னெடுத்தல் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.