கொழும்பில் அமைந்துள்ள பொலிஸ் மா அதிபர் மற்றும் பிரதம நீதியரசர் ஆகியோரின் உத்தியோகபூர்வ இல்லங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வீதிகளைத் தனது கைபேசியில் வீடியோ பதிவு செய்த குற்றச்சாட்டில் நபரொருவர் குருந்துவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் வீடியோ பதிவு செய்யப் ப…
கொழும்பில் அமைந்துள்ள பொலிஸ் மா அதிபர் மற்றும் பிரதம நீதியரசர் ஆகியோரின் உத்தியோகபூர்வ இல்லங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வீதிகளைத் தனது கைபேசியில் வீடியோ பதிவு செய்த குற்றச்சாட்டில் நபரொருவர் குருந்துவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் வீடியோ பதிவு செய்யப் பயன்படுத்திய கைபேசியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.வீடியோ பதிவு நேற்று (6) பொலிஸ் மா அதிபரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பிரதான நுழைவாயிலில் கடமையிலிருந்த விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவர், சொகுசு வாகனமொன்றில் வந்த நபரொருவர் வீதியோரத்தில் நின்றவாறு இல்லத்தை வீடியோ பதிவு செய்வதை அவதானித்துள்ளார்.
பின்னர், சந்தேக நபரின் செயற்பாடு குறித்து அருகில் கடமையிலிருந்த போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகபூர்வ அதிகாரியிடம் தெரிவிக்கவே, அவர் கொழும்பு அவசர அழைப்புப் பிரிவுக்குத் தகவல் வழங்கியுள்ளார்.
அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த குருந்துவத்தை பொலிஸ் குழுவினர் விசாரணைகளை நடத்தி சந்தேக நபரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் கைப்பேசியைச் சோதனையிட்டபோது, பொலிஸ் மாஅதிபரின் உத்தியோகபூர்வ இல்லம், அதனைச் சுற்றியுள்ள வீதி, பிரதம நீதியரசரின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் அதன் சூழல் ஆகியவற்றை வீடியோ எடுத்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்போது, பொழுதுபோக்கிற்காகவே தான் இவ்வாறு வீடியோ பதிவு செய்ததாகச் சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், மேலதிக விசாரணைகளின்போது தனது வசிப்பிடம் மற்றும் ஏனைய விபரங்கள் குறித்து அவர் முரணான தகவல்களை வழங்கி வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர் அழுபோமுல்ல - அறுகொட பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஆவார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் குருந்துவத்தை பொலிஸார் தீவிரமாக நடத்தி வருகின்றனர்.











