இலங்கை பொலிஸ் தலைமையகத்தின் சான்றளிப்பு பிரிவின் தரவுத்தளக் கணினி அமைப்பு செயலிழந்துள்ள நிலையில், பொலிஸ் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்காகப் பொதுமக்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான தற்காலிக நடைமுறையொன்றைப் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. பத்தரமுல்லையில் அமைந்துள்ள 'சுஹ…
இலங்கை பொலிஸ் தலைமையகத்தின் சான்றளிப்பு பிரிவின் தரவுத்தளக் கணினி அமைப்பு செயலிழந்துள்ள நிலையில், பொலிஸ் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்காகப் பொதுமக்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான தற்காலிக நடைமுறையொன்றைப் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள 'சுஹுருபாய' கட்டிடத்தின் 17வது மாடியில் இயங்கி வரும் சான்றளிப்புப் பிரிவின் கணினி முறைமை, நேற்று வியாழக்கிழமை (20) முதல் செயலிழந்துள்ளது. இக் கணினி முறைமை மீண்டும் சீரமைக்கப்படும் வரை பொதுமக்கள் பின்வரும் தற்காலிக நடைமுறையைப் பின்பற்றி விண்ணப்பிக்கலாம்.
பொதுமக்கள் இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.police.lk என்ற முகவரிக்குச் சென்று, "Download Application" என்பதைக் கிளிக் செய்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும்.இலங்கை அரசியல்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன், தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டின் ஒளிப்ப பிரதிகளை clear.application@police.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இத் தற்காலிக நடைமுறையின் கீழ் விண்ணப்பிக்கும் போது தற்போதைக்கு எந்தவொரு கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.
இவ்வாறாக மின்னஞ்சல் மூலம் பெறப்படும் விண்ணப்பங்களுக்குரிய பின்னணி அறிக்கைகளைச் சம்மந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களில் இருந்து பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
முறைமை சீரமைக்கப்பட்ட பின்னர், இத் தற்காலிக வழியில் விண்ணப்பித்த அனைவரும் அதற்குரிய கட்டணத்தைச் செலுத்தி, இணையவழி மூலமாக மீண்டும் ஒருமுறை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
ஏற்கனவே விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளவர்களில், சான்றிதழ் தயார் செய்யப்பட்டுள்ளவர்களின் குறிப்பு எண்கள் பொலிஸ் இணையத்தளத்தில் வெளியிடப்படும்.
குறிப்பு எண்கள் வெளியிடப்பட்ட விண்ணப்பதாரர்கள், பத்தரமுல்லை சுஹுருபாய கட்டிடத்தின் 17வது மாடிக்குச் சென்று வார இறுதி நாட்களில் (சனி மற்றும் ஞாயிறு) தங்களது சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
குறிப்பு எண்கள் வெளியிடப்படாத விண்ணப்பதாரர்களுக்கு, கணினி அமைப்பு சீரமைக்கப்பட்ட பின்னரே சான்றிதழ்கள் வழங்கப்படும்.
அமைப்பை விரைவாகச் சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், சீரமைக்கப்பட்டதும் பொதுமக்களுக்கு உடனடியாக அறிவிக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.












