அரச பல்கலைக்கழக அமைப்பைப் பாதிக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகளைக் கோரி, நாட்டிலுள்ள அனைத்து அரசுப் பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த விரிவுரையாளர்கள் நாளை மதிய உணவு இடைவேளையின் போது கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். பல்கலைக்கழக ஆசிரியர்களின் சங்கங்களின்…
அரச பல்கலைக்கழக அமைப்பைப் பாதிக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகளைக் கோரி, நாட்டிலுள்ள அனைத்து அரசுப் பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த விரிவுரையாளர்கள் நாளை மதிய உணவு இடைவேளையின் போது கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். பல்கலைக்கழக ஆசிரியர்களின் சங்கங்களின் சம்மேளனம் (FUTA) இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. அரசாங்கம் தங்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணத் தவறினால், அடுத்த வாரம் முதல் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர்களின் சங்கங்களின் சம்மேளனத்தின் செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இல்லங்கசிங்க எச்சரித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் பதவியேற்ற உடனேயே பல்கலைக்கழக அமைப்பைப் பாதிக்கும் சிக்கல்கள் குறித்துச் சுட்டிக்காட்டப்பட்டதாகவும், அவற்றுக்கான தீர்வு யோசனைகள் மற்றும் கடிதங்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் நேரடியாகச் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் சாருதத்த இல்லங்கசிங்க தெரிவித்தார். எனினும், பேச்சுவார்த்தைகளின் போது எட்டப்பட்ட உடன்பாடுகளையோ அல்லது முன்வைக்கப்பட்ட யோசனைகளையோ அரசாங்கம் இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இந்தப் பிரச்சினைகளுக்குத் தொடர்ச்சியாகத் தீர்வு காணப்படாததன் காரணமாக, அரசுப் பல்கலைக்கழகங்களிலிருந்து கல்விப் பணியாளர்கள் பெருமளவில் வெளியேறி வருவதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார். ஆண்டுக்கு சுமார் 25,000 மாணவர்கள் சேர்க்கப்பட்ட போது, 5,800 விரிவுரையாளர்கள் பணியில் இருந்தனர். ஆண்டு மாணவர் சேர்க்கை 45,000 ஆக அதிகரித்துள்ள போதிலும், சுமார் 1,000 விரிவுரையாளர்கள் பல்கலைக்கழக அமைப்பை விட்டு வெளியேறியுள்ளனர். சில கல்விப் பணிகளுக்கான பதவி வெற்றிடங்கள் அறிவிக்கப்பட்டபோதிலும், பல பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரிவுரையாளர்கள் முன்வருவதில்லை. அரசுப் பல்கலைக்கழக அமைப்பின் வீழ்ச்சி என்பது நாட்டின் எதிர்காலத்தின் வீழ்ச்சியாகும் என சாருதத்த இல்லங்கசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகாரிகளுடன் இது குறித்துப் பேசி அலுத்துவிட்ட நிலையில் இந்தத் தீர்மானத்திற்கு வந்துள்ளதாகக் கூறினார். அரசாங்கம் உரிய தீர்வினை வழங்கும் வரை இந்த ஆர்ப்பாட்டங்கள் தொடரும் எனவு, தேவைப்படின் போராட்டங்கள் மேலும் தீவிரமாக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

