பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நாளைய தினம் தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுகாதார அலுவலகத்தில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக, பொது சுகாதார பரிசோதகர் பி.எச். மிகஸ்தெனிய இடமாற்…

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நாளைய தினம் தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுகாதார அலுவலகத்தில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக, பொது சுகாதார பரிசோதகர் பி.எச். மிகஸ்தெனிய இடமாற்றம் செய்யப்பட்டதனை எதிர்த்துத்து, நாளை காலை 8.00 மணி முதல் நாடு தழுவிய அளவில் தீவிர தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இந்த விடயத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்பிரச்சனை குறித்து ஏற்கனவே அதிகாரிகளுக்குத் தெரிவித்தும், சுகாதார அமைச்சு இதுவரை எவ்வித தீர்வும் வழங்கவில்லை என அச்சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. நாட்டின் அனைத்து பொது சுகாதார பரிசோதகர்களும் நிர்வாகத்திற்கு வழங்கும் அனைத்து வகையான தரவுகள் மற்றும் அறிக்கைகளை வழங்குவது முற்றிலுமாக நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு தரவு அமைப்பையும் (Data systems updating) புதுப்பிக்கும் பணிகள் இடைநிறுத்தப்படும். இந்தப் போராட்டக் காலத்தில் விடுபடும் எந்தவொரு தரவுகளும் மீண்டும் ஒருபோதும் அமைப்புகளில் சேர்க்கப்படாது எனச் சங்கம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அதிகாரி பி.எச். மிகஸ்தெனியவின் தன்னிச்சையான இடமாற்றத்தை உடனடியாக ரத்து செய்து, நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக சுகாதார அலுவலகம் மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய சுகாதார அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட பொது சுகாதார பரிசோதகர்களின் எண்ணிக்கையைக் குறைக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் உடனடியாகக் கைவிடப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. எனினும், இப் பிரச்சினைகள் குறித்து நியாயமான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்குத் தயார் என பொதுச் சுகாதார அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.