போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து "முழு நாடுமே ஒன்றாக" தேசிய செயல்பாட்டு சபையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இன்று (10) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இச்செயல்பாட்டு சபை கூடியபோதே இது தொடர்பில் ஆராயப்பட்டது…
போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து "முழு நாடுமே ஒன்றாக" தேசிய செயல்பாட்டு சபையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இன்று (10) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இச்செயல்பாட்டு சபை கூடியபோதே இது தொடர்பில் ஆராயப்பட்டது.
நச்சு போதைப்பொருள் அச்சுறுத்தல் தற்போது தனிப்பட்ட தொடர்புகளையும் தாண்டி, ஒட்டுமொத்த பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்பிற்கே பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளமையையும், அது தொடர்ந்து அதிகரித்து வருவதையும் கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டப்படும் வரம்பற்ற செல்வத்தைச் சுற்றி உருவெடுத்துள்ள குற்றவியல் சூழல், தற்போது தேசிய பொருளாதாரம், சுற்றுலாத்துறை மற்றும் சமூக ஒழுக்க நெறிமுறைகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றது.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றச்செயல்கள் குறித்து அச்சப்படும் ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்காகக் கடுமையான சட்டதிட்டங்களை அமல்படுத்துவதன் அவசியம் குறித்து "நாடு ஒன்றாக" தேசிய செயல்பாட்டு சபையில் விவாதிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.
ஒட்டுமொத்த சமூகக் கட்டமைப்பையும் சீர்குலைத்து, நாட்டின் எதிர்கால சந்ததியை இரையாக்கிக் கொண்டிருக்கும் நச்சு போதைப்பொருள் பேரழிவை வேரோடு பிடுங்கியெறிய நாட்டில் நடைமுறைச் செயல்பாடுகளையும், விரைவான கருத்தியல் மாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.
இதற்காக மதத் தலைவர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் தீவிர பங்களிப்பை அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த தேசிய பேரழிவின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு, நிறுவன அமைப்பிற்குள் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.
போதைப்பொருள் கட்டுப்பாடு மற்றும் பிணை வழங்குதல் தொடர்பான சட்டத் திருத்தங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு இறுதிப் கட்டத்தில் உள்ளன என்றும், அவை விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.போதைப்பொருள் வழக்குகள் தாமதமாவதற்கு முக்கிய காரணமாக இருந்த அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கைகளை வெளியிடும் செயல்முறை கணிசமாக துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 6,414 அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கை தாமதத்தால் சிறையிலுள்ளவர்களின் சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்காக, கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் அளவுக்கு ஏற்ப (5 கிராமிற்கும் குறைவாக, 10 கிராமிற்கும் குறைவாக என) துல்லியமான தரவு வகைப்பாட்டைச் சமர்ப்பிக்குமாறும் இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம், பொலிஸ் மற்றும் சிறைச்சாலைகளுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, அறிக்கைகள் கிடைத்தவுடன் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான முறையான வேலைத்திட்டத்தைத் தயாரிக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் கொள்ளளவை அதிகரிப்பது மற்றும் வசதிகளை விரிவுபடுத்துவது குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும் கேட்டறிந்த ஜனாதிபதி, இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகளைப் பெறுவதற்கு கடற்படையின் உதவியைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பாதுகாப்பு கெமரா அமைப்புகளை (CCTV) பொருத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்வதற்கும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












