ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான பல கடற்பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் “அம்பர்” எச்சரிக்கையை விடுத்துள்ளது. முல்லைத்தீவு முதல் காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடான சிலாபம் வரையிலும், ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பகுதிகள்…

ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான பல கடற்பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் “அம்பர்” எச்சரிக்கையை விடுத்துள்ளது.

முல்லைத்தீவு முதல் காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடான சிலாபம் வரையிலும், ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும், மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

புத்தளம் முதல் கொழும்பு, மாத்தறை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பகுதிகளில் அலைகளின் உயரம் தோராயமாக 2.0-2.5 மீட்டராக அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கடற்படையினரும் மீன்பிடி சமூகத்தினரும் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்நிலையில் நாட்டில் தற்போது நிலவும் எல் நினோ வானிலை தாக்கம் காரணமாக எதிர்வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சராசரியை விட அதிகமான மழைப்பொழிவு ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வுத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இதனால் நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரம்பி, சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமன்ன தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆறு மாதங்களுக்கான வானிலை தரவுகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் இந்த நிலைமை எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக நாட்டின் வருடாந்த மழைப்பொழிவில் சுமார் 30 சதவீதம் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பதிவாகும் நிலையில், இம்முறை வழக்கத்தை விட அதிகமான மழைப்பொழிவு ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அதிக மழைப்பொழிவு ஏற்படும் என்பதற்காக அனைத்து பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என அர்த்தமில்லை என்றும், சாத்தியமான நிலைமைகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றும் அஜித் விஜேமன்ன தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்வரும் டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் எல் நினோ நிகழ்வின் தாக்கம் மேலும் தீவிரமடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.