கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (6) இரவு ஏற்பட்ட அமைதியின்மை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். சம்பவத்திற்குக் காரணமாக இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை எட…
கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்று (6) இரவு ஏற்பட்ட அமைதியின்மை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சம்பவத்திற்குக் காரணமாக இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறைச்சாலைச் சுவருக்கு மேல் இருந்து உள்ளே வீசப்பட்ட சிறிய பொதி ஒன்றை சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைப்பற்றியதைத் தொடர்ந்து, சில கைதிகள் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, சிறைக் கூடம் ஒன்றின் பூட்டை உடைத்து 40-க்கும் மேற்பட்ட கைதிகள் வெளியே வந்துள்ளனர். பின்னர் சிறைச்சாலை அதிகாரிகள், பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நிலைமையை விரைவாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, கைதிகளை மீண்டும் அவர்களது சிறைக் கூடங்களுக்கு அனுப்பியுள்ளனர்.
பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில், சிறைச்சாலை வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் முப்படையினரும் களமிறக்கப்பட்டனர்.
மேலும், நிலைமையை தொடர்ந்து கண்காணிப்பதற்காக இலங்கை விமானப்படையின் ட்ரோன்களும் பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












