'ஹரக் கட்டா' என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான நதுன் சிந்தக விக்ரமரத்னவின் மனைவியிடமிருந்து 120 மில்லியன் ரூபா லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் நீதியமைச்சரின் மகன், ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தொகுதி அமைப்பாளர் மற்றும் மற்றொருவர் ஆகிய…
'ஹரக் கட்டா' என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான நதுன் சிந்தக விக்ரமரத்னவின் மனைவியிடமிருந்து 120 மில்லியன் ரூபா லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் நீதியமைச்சரின் மகன், ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தொகுதி அமைப்பாளர் மற்றும் மற்றொருவர் ஆகிய மூவரையும் எதிர்வரும் ஜூலை 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் அஸங்க எஸ். போதாரகம இன்று உத்தரவிட்டார். அத்துடன், சந்தேக நபர்களின் பாதுகாப்பு தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்குத் தேவையான உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறும் நீதவான் அறிவுறுத்தினார். சந்தேக நபர்களுக்கு எதிராகஇலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் (CIABOC) பணிப்பாளர் நாயகத்தினால் கையொப்பமிடப்பட்ட, தண்டனைச் சட்டக் கோவையின் 149ஆவது பிரிவின் கீழான சான்றிதழ் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்தச் சான்றிதழின்படி, சந்தேக நபர்களுக்குப் பிணை வழங்குவதற்குச் சிறப்பான சூழ்நிலைகள் காணப்பட வேண்டும். எனினும், சந்தேக நபர்கள் சார்பில் அத்தகைய சிறப்பான சூழ்நிலைகள் எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை என்பதை அவதானித்த நீதவான், அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். முன்னாள் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரான விஜயதாச ராஜபக்ஷவின் மகன், சட்டத்தரணி ரகித நிர்மல ராஜபக்ஷ. ஹொரண தொகுதிக்கான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) அமைப்பாளர், சரித் வசந்த குமார அபேசிங்க. விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (இலங்கை) நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர், வருஷஹென்னதிகே அருண ஸ்ரீ சதுரங்க. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தடுப்புக் காவலில் இருந்த 'ஹரக் கட்டா'வின் உயிரைப் பாதுகாப்பதாக உறுதியளித்து, 2023ஆம் ஆண்டு துபாயில் வைத்து இச்சந்தேக நபர்கள் இந்த லஞ்சத் தொகையைப் பெற்றுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சந்தேக நபர் மீதான தடுப்புக் காவல் உத்தரவுகளை நீக்குதல், அவரை காலி பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையிலிருந்து வேறொரு சிறைச்சாலைக்கு மாற்றுதல் மற்றும் அவருக்கு எதிரான விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளிலிருந்து அவரை விடுவிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாகக் கூறி, இந்த லஞ்சம் பெறப்பட்டதாக ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.

