2025(2026) கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மறுபரிசீலனைக்காக விண்ணப்பிக்கும் காலவகாசம் இன்றுடன் (08) நிறைவடைகிறது. கடந்த ஜூன் மாதம் 25 ஆம் திகதி முதல் இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்ததுடன், பாடசாலை மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் அனைவரும் தாமாகவே விண்ணப…
2025(2026) கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மறுபரிசீலனைக்காக விண்ணப்பிக்கும் காலவகாசம் இன்றுடன் (08) நிறைவடைகிறது.
கடந்த ஜூன் மாதம் 25 ஆம் திகதி முதல் இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்ததுடன், பாடசாலை மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் அனைவரும் தாமாகவே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. விண்ணப்பங்கள்
வேறு வழிமுறைகள் ஊடாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk இற்குச் சென்று, "Our Services" (எமது சேவைகள்) என்பதன் கீழ் உள்ள "Exam Information Centre" ஐ அழுத்துவதன் மூலம் விண்ணப்பிக்க முடியும்.ஏற்கனவே பயனர் கணக்கைக் கொண்டுள்ளவர்கள் தங்களது பரீட்சை சுட்டெண் மற்றும் தேசிய அடையாள அட்டை (NIC) எண்ணைப் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்.
புதிய பயனர்கள் தேசிய அடையாள அட்டை எண் மற்றும் தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்தி பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கு முன் தொழில்நுட்ப மற்றும் பொதுவான வழிமுறைகளை கவனமாக வாசிப்பதுடன், விளக்கக் காணொளியையும் பார்வையிடுமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
மறுபரிசீலனைக்கான கட்டணம் ஒவ்வொரு பாடத்திற்கும் 200 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், அதனை கடன் அட்டை (Credit Card), பற்று அட்டை (Debit Card) அல்லது தபால் நிலையம் ஊடாக செலுத்தலாம்.
கட்டணம் செலுத்திய பின்னர் விண்ணப்பத்தின் PDF பிரதியை பதிவிறக்கம் செய்து பாதுகாத்து வைத்திருக்க வேண்டும்.விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் குறுந்தகவல் ஒன்றும் அனுப்பப்படும்.
ஒவ்வொரு பரீட்சார்த்தியிடமிருந்தும் ஒரு இணையவழி விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், மறுபரிசீலனைக்காக செலுத்தப்பட்ட கட்டணம் எந்த நிலையிலும் மீளச் செலுத்தப்படமாட்டாது என்றும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.மேலதிக விபரங்களுக்கு 1911 என்ற உடனடி அழைப்பு இலக்கம் அல்லது 0112 785 231 உள்ளிட்ட உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கங்கள் ஊடாகத் தொடர்புகொண்டு வினவல்களை மேற்கொள்ள முடியும்.

