சந்தையில் விற்பனை செய்யப்படும் சில வகை சவர்க்காரங்களின் இறக்குமதி, உற்பத்தி, களஞ்சியப்படுத்தல், விநியோகம் மற்றும் விற்பனை நடவடிக்கைகளின் போது, அவற்றின் பொதியிடல் மற்றும் லேபிள்களில் குறிப்பிட்ட தகவல்களை கட்டாயமாக குறிப்பிடும் வகையில் புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.ந…

சந்தையில் விற்பனை செய்யப்படும் சில வகை சவர்க்காரங்களின் இறக்குமதி, உற்பத்தி, களஞ்சியப்படுத்தல், விநியோகம் மற்றும் விற்பனை நடவடிக்கைகளின் போது, அவற்றின் பொதியிடல் மற்றும் லேபிள்களில் குறிப்பிட்ட தகவல்களை கட்டாயமாக குறிப்பிடும் வகையில் புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக இந்த புதிய உத்தரவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகார சபைச் சட்டத்தின் 10(1)(அ) பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதன்படி, சவர்க்கார உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள், களஞ்சியப்படுத்துவோர் மற்றும் வர்த்தகர்கள் அனைவருக்கும் இந்த புதிய ஒழுங்குவிதிகள் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விதிமுறைகளுக்கு அமைய, சவர்க்காரத்தின் உற்பத்திப் பெயர் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் அல்லது அவற்றில் ஏதேனும் இரண்டு மொழிகளிலும் பிரதான சட்டகத்தில் (Main Panel) தடித்த எழுத்துக்களில் குறிப்பிடப்பட வேண்டும்.

மூன்றாவது மொழியில் உள்ள தகவல் பொதியின் வேறு ஏதேனும் ஒரு பகுதியில் குறிப்பிடப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அத்துடன், பொதியிடப்படும் போது குறித்த சவர்க்காரத்தில் உள்ள மொத்த கொழுப்புப் பொருளின் அளவு சதவீதமாக (%) தெளிவாகவும் வெளிப்படையாகவும் 2 மில்லிமீற்றருக்கு குறையாத அளவிலான தடித்த எழுத்துக்களில் அச்சிடப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த புதிய விதிமுறைகள் குழந்தைகளுக்கான சவர்க்காரம், உடலுக்கு பயன்படுத்தும் சவர்க்காரம், முகச்சவர சவர்க்காரம், கார்போலிக் சவர்க்காரம், சலவைச் சவர்க்காரம், குளியல் கட்டி மற்றும் மென் சவர்க்காரம் உள்ளிட்ட பல வகையான சவர்க்காரங்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையின் பதில் தலைவர் எஸ்.எம்.டீ. சூரியகுமாரவின் பரிந்துரைக்கு அமைய, இந்த புதிய ஒழுங்குவிதிகள் 2027 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அமுல்படுத்தப்படவுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நுகர்வோருக்கு தயாரிப்பு தொடர்பான தெளிவான தகவல்களை வழங்குவதையும், சந்தையில் தரநிலைகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.