அண்மையில் கைதான, நாட்டின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஓருவராக கருதப்படும் ஷிரான் பாசிக் என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்க்கட்சியிலுள்ள இரு பலம்பொருந்திய அரசியல்வாதிகளின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காகத் தான் பெரு…

அண்மையில் கைதான, நாட்டின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஓருவராக கருதப்படும் ஷிரான் பாசிக் என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்க்கட்சியிலுள்ள இரு பலம்பொருந்திய அரசியல்வாதிகளின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காகத் தான் பெருந்தொகை பணத்தை செலவிட்டதாக ஷிரான் பாசிக் ஒப்புக்கொண்டுள்ளார். ஒரு அரசியல்வாதியின் பிரசாரத்திற்காக 50 பேருந்துகளை வழங்கியதுடன், பெருமளவு பணத்தையும் கையளித்துள்ளார். இவருடன் பணப்பரிமாற்றம் செய்த அரசியல்வாதிகள் குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளது. இதில் ஒருவர் களுத்துறை பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர் எனத் தெரியவந்துள்ளது. தெஹிவளை - கல்கிஸ்சை கடற்கரை யோரத்தில் அமைந்துள்ள 5 சொகுசு ஹோட்டல்கள் தனக்குச் சொந்தமானவை என பாசிக் வெளிப்படுத்தியுள்ளார். அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்திய 'சோல் பீச்' ஹோட்டலும் இதில் அடங்கும். பொரலஸ்கமுவ, தெஹிவளை, கல்கிஸ்சை, இரத்மலானை மற்றும் மொரட்டுவை ஆகிய பகுதிகளில் பல ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளில் இவர் முதலீடு செய்துள்ளார். போதைப்பொருள் வியாபாரம் மூலம் ஈட்டிய சட்டவிரோதப் பணத்தை சட்டப்பூர்வமான பணமாக மாற்றுவதற்காகவே இவர் இந்த வியாபாரங்களில் முதலீடு செய்துள்ளார். கடற்கரையோர ஹோட்டல்களை பிற நபர்களின் பெயர்களிலேயே நடத்திவந்துள்ளார். கடற்கரையோரக் காணிகளின் ஏழை உரிமையாளர்களின் பெயர்களைப் பயன்படுத்தி, அங்கு ஹோட்டல்களைக் கட்டி நிர்வகித்துள்ளார். அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிகளையும் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தி, ஹோட்டல்கள் மற்றும் கட்டிடங்களைக் கட்டியுள்ளமை அம்பலமாகியுள்ளது. கல்கிஸ்சை பகுதியைச் சேர்ந்த பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினர்களான அல்டோ தர்மே, படோவிட்ட அஸங்க மற்றும் சான்டோ ஆகியோர் தனது நெருங்கிய நண்பர்கள் எனவும், அவர்கள் அனைவரும் தனது போதைப்பொருள் வலைப்பின்னலுடன் தொடர்புடையவர்கள் எனவும் ஷிரான் பாசிக் மேலும் வாக்குமூலம் அளித்துள்ளார்.