சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 105ஆவது ஆண்டு நிறைவு விழா நேற்று வெள்ளிக்கிழமை (26) கொழும்பில் விசேட உத்தியோகபூர்வ நிகழ்வாகக் கொண்டாடப்பட்டது. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வை, சீன ஊடகக் குழுமத்தின் சிங்களச் சேவையும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து ஏ…
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 105ஆவது ஆண்டு நிறைவு விழா நேற்று வெள்ளிக்கிழமை (26) கொழும்பில் விசேட உத்தியோகபூர்வ நிகழ்வாகக் கொண்டாடப்பட்டது. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வை, சீன ஊடகக் குழுமத்தின் சிங்களச் சேவையும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. இந்த நிகழ்வில் சுற்றாடல் அமைச்சர் கலாநிதி தம்மிக படபெந்தி, இலங்கையில் உள்ள சீனத் தூதுவர் கீ சென்ஹாங், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஜி. வீரசிங்க மற்றும் 'சர்வஜன பலய' கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் திலீத் ஜயவீர உட்பட பல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இராஜதந்திரிகளும் கலந்துகொண்டனர். இதன்போது, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய வாழ்த்துச் செய்தி ஒன்றையும் வெளியிட்டுள்ளார். "ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக சீன கம்யூனிஸ்ட் கட்சி வழங்கி வரும் தனித்துவமான தலைமையின் கீழ், சீனாவின் தேசிய வளர்ச்சி, சமூக முன்னேற்றம் மற்றும் மக்களின் நலன்புரித் திட்டங்கள் ஆகியவற்றில் அடைந்துள்ள வெற்றிகள் பாராட்டுக்குரியவை. சீன மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவது மட்டுமன்றி, உலகளாவிய பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப புத்தாக்கம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதிலும் சீனா மிக முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளது" என பிரதமர் குறிப்பிட்டிருந்தார். இந்நிகழ்வில் உரையாற்றிய சுற்றாடல் அமைச்சர் தம்மிக படபெந்தி, பரஸ்பர மரியாதை, புரிதல் மற்றும் பொதுவான இலக்குகளை அடிப்படையாகக் கொண்ட வழிகாட்டலின் மூலம் பன்முகத்தன்மையை ஒரு பலமாக மாற்ற முடியும் என்பதற்கு சீனாவின் அனுபவங்களே சிறந்த எடுத்துக்காட்டு எனத் தெரிவித்தார். இது இலங்கைக்கு ஒரு சிறந்த முன்மாதிரி எனக் குறிப்பிட்ட அவர், தேசிய ஒருமைப்பாடு, சகவாழ்வு மற்றும் இன நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் உறுதியளித்தார். இதேவேளை, சீனத் தூதுவர் கீ சென்ஹாங் தனது உரையில், சீனாவும் இலங்கையும் எப்போதும் ஆழமான நட்புறவைப் பேணி வருவதாகக் குறிப்பிட்டார். மேலும், இரு நாடுகளினதும் இளைய தலைமுறையினர் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொள்வது, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு முக்கிய காரணியாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

