கொட்டகலை சுரங்க பாதைக்கு சமீபமாக சீரற்ற காலநிலையால் சேதமடைந்த தொடருந்து வீதி தற்போது அறுபது சதவீதம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கொட்டகலை புனரமைப்பு பணிகளை மேற்பார்வை செய்யும் தொழிநுட்ப அதிகாரி அதுல விஜேசிங்க தெரிவித்துள்ளார். சீரான காலநிலை தொடருமானால், எதிர்வரும் செப்டெம்பர் 8ஆம…

கொட்டகலை சுரங்க பாதைக்கு சமீபமாக சீரற்ற காலநிலையால் சேதமடைந்த தொடருந்து வீதி தற்போது அறுபது சதவீதம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கொட்டகலை புனரமைப்பு பணிகளை மேற்பார்வை செய்யும் தொழிநுட்ப அதிகாரி அதுல விஜேசிங்க தெரிவித்துள்ளார். சீரான காலநிலை தொடருமானால், எதிர்வரும் செப்டெம்பர் 8ஆம் திகதியளவில் பணிகளை முழுமையாக நிறைவு செய்து ஒப்படைக்க எதிர்பார்ப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மலையக தொடருந்து சேவையை மீண்டும் முழுமையாக வழமைக்கு கொண்டு வருவதற்கான புனரமைப்பு பணிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.சேதமடைந்த தொடருந்து பாதையின் புனரமைப்பு பணிகள் கொட்டகலை சுரங்கப்பாதைக்கு அண்மித்த பகுதியில் சீரற்ற காலநிலை மற்றும் மண்சரிவு காரணமாக சேதமடைந்த தொடருந்து பாதையின் புனரமைப்பு பணிகள் கடந்த மே மாதம் ஆரம்பிக்கப்பட்டன. எனினும், ஜூலை மாதம் முதல் நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக பணிகளை திட்டமிட்ட வேகத்தில் முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

தற்போது சீரான காலநிலை நிலவி வருவதால், புனரமைப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து சீரான காலநிலை நிலவினால் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதியளவில் புனரமைப்பு பணிகளை நிறைவு செய்து ஒப்படைக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த வருடம் நவம்பர் மாதம் ஏற்பட்ட டிட்வா சூறாவளியைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளிலுள்ள தொடருந்து பாதைகள் கடுமையாக சேதமடைந்தன.

குறிப்பாக மலையக தொடருந்து பாதைகளில் பல இடங்களில் மண்சரிவு, வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களால் பாரிய சேதங்கள் ஏற்பட்டன.மீள ஆரம்பிப்பு இதனையடுத்து, சேதமடைந்த பகுதிகள் கட்டம் கட்டமாக புனரமைக்கப்பட்டு, சில பகுதிகளில் தொடருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தற்போது மலையகத்திற்கான தொடருந்து சேவைகள் பதுளை முதல் நானுஓயா வரையிலும், நாவலப்பிட்டி முதல் வட்டவளை வரையிலும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், கொட்டகலை மற்றும் கிரேட்வெஸ்டன் பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக தொடருந்து பாதைகள் பாரியளவில் சேதமடைந்துள்ளன.

இதன் காரணமாக மலையகத்திற்கான முழுமையான தொடருந்து சேவையை தொடர்ச்சியாக முன்னெடுப்பதில் தடைகள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக கொட்டகலை மற்றும் கிரேட்வெஸ்டன் ஆகிய இரண்டு பகுதிகளிலும் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்தால், பதுளையிலிருந்து நாவலப்பிட்டி வரையான தொடருந்து சேவையை தடையின்றி முன்னெடுக்க முடியும் என தொடருந்து திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மலையகத்தின் பொருளாதாரம், கல்வி, தொழில் மற்றும் அன்றாட போக்குவரத்துடன் நெருங்கிய தொடர்புடையதாக காணப்படும் தொடருந்து சேவை, நீண்டகாலமாக ஏற்பட்டுள்ள இந்த தடையால் பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.