எம்.எச்.எம். சியாஜ் வனப்பகுதியில் கம்பீரமாக வலம் வந்த தாய் யானை ஒன்று, உயிரிழந்த நிலையில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இந்த யானையின் மரணம் இயற்கையானது அல்ல என்பது பிரேதப் பரிசோதனை மூலம் உறுதியாகியுள்ளது. புத்தளம், செல்லக்கண்டல் வனப்பகுதியிலேயே இந்…

எம்.எச்.எம். சியாஜ் வனப்பகுதியில் கம்பீரமாக வலம் வந்த தாய் யானை ஒன்று, உயிரிழந்த நிலையில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இந்த யானையின் மரணம் இயற்கையானது அல்ல என்பது பிரேதப் பரிசோதனை மூலம் உறுதியாகியுள்ளது. புத்தளம், செல்லக்கண்டல் வனப்பகுதியிலேயே இந்த சோகமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுமார் 35 முதல் 40 வயதுடைய, 8 அடி உயரமான இந்தத் தாய் யானையின் உடற்கூற்றுப் பரிசோதனையை மேற்கொண்ட போது, நெஞ்சை உலுக்கும் தகவல் வெளிவந்தது. அந்த யானையின் வயிற்றில் 15 மாதங்களான, நன்கு வளர்ச்சியடைந்த பெண் குட்டி யானையொன்றின் சிசு இருந்துள்ளது. பூமிக்கு வரக் காத்திருந்த அந்தக் குட்டியும் தாயுடன் சேர்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளமை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தத் தாய் யானை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிமுகமான ஒன்றாகும். கடந்த பல மாதங்களாக இப்பகுதியிலேயே சுற்றித்திரிந்த இந்த யானையின் கால்களில் ஏற்பட்ட காயங்களுக்கு, அதிகாரிகள் பலமுறை சிகிச்சையளித்துள்ளனர். இவ்வளவு கண்காணிப்பில் இருந்த யானைக்கு நேர்ந்த இந்த திடீர் மரணம் பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது. யானையின் கால்களில் முன்னொரு காலத்தில் துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்துள்ளன. அந்தத் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களின் ஊடாக உடலில் பரவிய கொடிய கிருமித் தொற்று (விஷம் ஏறியமை) காரணமாகவே, இந்தத் தாயும் சேயும் உயிரிழந்திருக்கலாம் என வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் தொடர்பான முழுமையான பிரேதப் பரிசோதனைகளை, நிக்கவெரட்டிய மிருக வைத்திய காரியாலயத்தின் வைத்திய அதிகாரி செல்வி ஏ.எம்.பி.எம். அசாசூரிய தலைமையிலான மருத்துவக் குழுவினர் மேற்கொண்டனர். மனிதர்களின் இரக்கமற்ற செயலுக்கு மீண்டும் ஒரு தாயும் சேயும் பலியாகியுள்ளமை கண்டிக்கத்தக்கதும் கவலைக்குரியதுமான விடயமாகும்.