இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களத்தின் மிக உயரிய பதவிகளில் பெரும்பாலானவை தற்காலிக அதிகாரிகளால் வகிக்கப்படுவதால் ஒட்டுமொத்த சிறை நிர்வாகமும் பாரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப செயலாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். க…
இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களத்தின் மிக உயரிய பதவிகளில் பெரும்பாலானவை தற்காலிக அதிகாரிகளால் வகிக்கப்படுவதால் ஒட்டுமொத்த சிறை நிர்வாகமும் பாரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப செயலாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று(16.07.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். சிறைச்சாலைகளில் நிலவும் நெருக்கடி நாட்டின் பாதுகாப்புக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த சிறைச்சாலைகள் திணைக்களத்தின் உயரிய 6 பதவிகளில், 5 பதவிகள் (83 சதவீதம்) தற்காலிக அதிகாரிகளிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று சுட்டிக்காட்டிய அவர், ஆணையாளர் நாயகம் மற்றும் ஊடகப் பேச்சாளர் உட்பட முக்கிய அதிகாரிகள் தற்காலிக அடிப்படையிலேயே கடமையாற்றுகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அரச நிர்வாக விதிமுறைகளின்படி தற்காலிக அதிகாரிகளால் தீர்க்கமான முடிவுகளை எடுக்க முடியாது என்பதால், சிறைச்சாலைகள் திணைக்களத்தின் செயற்பாடுகள் முடங்கியுள்ளன என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். சிறைச்சாலைகளில் நிலவும் இட நெருக்கடி குறித்துப் புள்ளிவிவரங்களைப் பகிர்ந்த அவர், தற்போதைய நிலைமைகளைப் பின்வருமாறு விவரித்துள்ளார்.
தண்டனை பெற்றவர்கள்: 10,662 பேர், சந்தேகநபர்கள்: 27,681 பேர்.
மொத்த சிறைக்கைதிகளில் 73 சதவீதத்தினர் இன்னும் குற்றம் நிரூபிக்கப்படாத சந்தேகநபர்களே என்பதுடன், தண்டனை பெற்றவர்களை விட மூன்று மடங்கு அதிகளவிலான சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.கடுமையான பணிச்சுமை
நாட்டின் மொத்த சிறைக்கைதிகளில் 52 சதவீதத்தினர் மேல் மாகாண சிறைகளிலேயே உள்ளனர்.
சிறைச்சாலை திணைக்களத்தில் நேரடிப் பாதுகாப்பில் ஈடுபடும் 4220 அதிகாரிகளே உள்ளனர். சர்வதேச நியமங்களின்படி ஒரு அதிகாரிக்கு 8 கைதிகள் என்ற அடிப்படையில் பாதுகாப்பு இருக்க வேண்டும்.
ஆனால், இலங்கையில் ஒரு அதிகாரி 30 கைதிகளைக் கண்காணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளமையால் அவர்கள் கடுமையான பணிச்சுமைக்கும் மன அழுத்தத்துக்கும் உள்ளாகுகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நெருக்கடிகளுக்குத் தீர்வாக சுரேன் ராகவன் முன்வைத்த பரிந்துரைகளாக,
தண்டனை பெற்றவர்களையும், குற்றம் நிரூபிக்கப்படாத சந்தேகநபர்களையும் சர்வதேச மனித உரிமை நெறிமுறைகளுக்கு அமைவாக வெவ்வேறான கட்டமைப்புகளில் தடுத்து வைக்க வேண்டும்.
நாட்டின் 34 சிறைச்சாலைகளையும் உள்ளடக்கிய வகையில், நவீன 'டிஜிட்டல் சிறை கண்காணிப்பு மையம்' ஒன்றை உடனடியாக உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பவை அமைகின்றன.

