Colombo (News 1st) அனைத்து சிறைச்சாலைகளினதும் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணாயக்கார தெரிவித்துள்ளார்.இந்த நடவடிக்கைகளுக்கான ஒத்துழைப்புகளை பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொலிஸாரிடமிருந்து…

Colombo (News 1st)  அனைத்து சிறைச்சாலைகளினதும் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணாயக்கார தெரிவித்துள்ளார்.இந்த நடவடிக்கைகளுக்கான ஒத்துழைப்புகளை பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொலிஸாரிடமிருந்து பெற்றுக்கொள்ளவுள்ளதாக அமைச்சர் கூறினார்.கிடைக்கப்பெறும் புலனாய்வுத் தகவல்களுக்கமைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள நெரிசலுக்குத் தீர்வாக கைதிகளை வீட்டுக்காவலில் வைப்பதற்கான சட்டங்களை தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணாயக்கார தெரிவித்தார்.கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களுக்கமைய, மஹர சிறைச்சாலையில் கைதிகள் நிர்வாகத்தினருடன் மோதல்களில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.போதைப்பொருளுக்கு எதிராக அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் விளைவாக, கடந்த காலங்களில் போன்று சிறைச்சாலைகளுக்குள் கொண்டு செல்லப்படும் போதைப்பொருட்களின் அளவு குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.இதன் காரணமாகவும் சிறைச்சாலைகளில் அமைதியின்மை ஏற்பட்டிருக்கலாம் என அமைச்சர் ஹர்ஷன நாணாயக்கார தெரிவித்தார்.அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கை தாமதமடைவதால் சிறைக்கைதிகளுக்கு பிணை வழங்குவதற்கு தாமதம் ஏற்படுவதாகவும் மாதமொன்றுக்கு 7,500 முதல் 9000 இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகளை வெளியிடுவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.அதனூடாக, சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள நெரிசலை குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் ஹர்ஷன நாணாயக்கார தெரிவித்தார்.