கண்டி, வத்துகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யடிராவண பகுதியில், வீதியோரத்தில் கைவிடப்பட்டிருந்த சுமார் நான்கு வயது மதிக்கத்தக்க சிறுமியொருவர் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் சிறுமியின் தாயும், தாயின் கள்ளக்காதலனும் கைது…
கண்டி, வத்துகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யடிராவண பகுதியில், வீதியோரத்தில் கைவிடப்பட்டிருந்த சுமார் நான்கு வயது மதிக்கத்தக்க சிறுமியொருவர் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் சிறுமியின் தாயும், தாயின் கள்ளக்காதலனும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தாயும், கள்ளக்காதலனும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என விசாரணைகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், சிறுமியின் தந்தையும், வேலைத்தளத்தில் இருந்து திரும்பி, கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது மகளை பார்வையிட்டுள்ளார்.
தான் தங்கியிருந்து கூலி வேலைச்செய்வதாகவும் அப்போதே தனது மனைவிக்கும் அந்த நபருக்கும் இடையில் கள்ளக்காதல் உறவு ஏற்பட்டுள்ளது என்றும் கணவன், பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை (13) காலை 6:15 மணியளவில் குறித்த பகுதிக்கு முச்சக்கர வண்டியில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், சிறுமியை அங்கு இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். அச்சிறுமியின் அழுகைக் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த பிரதேசவாசிகள், உடனடியாகப் பொலிஸ் அவசரப் பிரிவுக்குத் தகவல் அளித்துள்ளனர்.
தகவலறிந்ததும் விரைந்து செயல்பட்ட வத்துகாமம் பொலிஸ் உத்தியோகத்தர்கள், சிறுமியைத் தங்களது பாதுகாப்பின் கீழ் கொண்டுவந்தனர். முதற்கட்டமாக வத்துகாமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அச்சிறுமி, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காகக் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பச்சை நிற முச்சக்கர வண்டியிலேயே சிறுமி கொண்டுவரப்பட்டதாகப் பொலிஸார் விசாரணைகளில் கண்டறிந்துள்ளனர். பெற்றோரே இவரைக் கைவிட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், அவர்களைக் கைது செய்வதற்கான விசேட தேடுதல் வேட்டையைச் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேலும், அச்சிறுமியின் உடலில் தொடர்ச்சியான துன்புறுத்தல்களுக்கான காயங்கள் மற்றும் அடையாளங்கள் காணப்படுவதால், இது குறித்த விரிவான மருத்துவ அறிக்கையைப் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.











