நாட்டில் நிலவும் அதிக வெப்பமான வானிலை காரணமாக குழந்தைகளை சுற்றுலாப் பயணங்கள் மற்றும் யாத்திரைப் பயணங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தவிர்க்குமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. பொரளை லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவ நிபுணர் டொக்டர் தீபால் ப…
நாட்டில் நிலவும் அதிக வெப்பமான வானிலை காரணமாக குழந்தைகளை சுற்றுலாப் பயணங்கள் மற்றும் யாத்திரைப் பயணங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தவிர்க்குமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. பொரளை லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவ நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். அவ்வாறு அழைத்துச் செல்வதன் மூலம் குழந்தைகள் வெப்ப அதிர்ச்சி, மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற ஆபத்தான பாதிப்புகளுக்கு ஆளாகக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார். இந்நாட்களில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் விரைவாக நீரிழப்புக்கு ஆளாகும் அபாயம் உள்ளது. எனவே, பெற்றோர்கள் குழந்தைகளின் உடல் எடைக்கு ஏற்ப தேவையான அளவு நீரைக் குடிக்க வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். பெரியவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 3 லீட்டர் நீராவது பருக வேண்டும் என தெரிவித்துள்ளார். சிறுவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது குறைந்தது 2 தண்ணீர் போத்தல்களையாவது உடன் எடுத்துச் செல்ல வேண்டும். மேலும், சிறுவர்கள் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது தண்ணீரில் இறங்கி குளிப்பது அவர்களின் உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் என அறிவுறுத்தியுள்ளார். செயற்கை சுவையூட்டிகள் மற்றும் அதிக சர்க்கரை நிறைந்த பானங்களை சிறுவர்களுக்கு வழங்குவதைத் தவிர்த்து, தோடம்பழம், எலுமிச்சை, இளநீர், கஞ்சி, சூப் மற்றும் தர்பூசணி சாறு போன்ற இயற்கை திரவ உணவுகளை வழங்க வேண்டும். நீண்டகாலமாகப் போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது சிறுநீரக நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை கணிசமாக அதிகரிக்கும் என்று மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாடசாலை விடுமுறைக் காலத்தில் சிறுவர்களை மொபைல் போன்களைப் பயன்படுத்தி நேரத்தைக் கழிக்க விடாமல், அவர்களைப் பல்வேறு உடற்பயிற்சிகள் மற்றும் விளையாட்டுச் செயல்பாடுகளில் ஈடுபடுத்துவது மிகவும் முக்கியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.












