(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகளின் போது உதய கம்மன்பிலவின் செயற்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கும் இந்த தாக்குதலுக்கும் இடையில் தொடர்பு உள்ளதா? என்ற சந்தேகங்கள் எழுகின்றன. உதய கம்மன்…

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகளின் போது  உதய கம்மன்பிலவின் செயற்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கும் இந்த தாக்குதலுக்கும் இடையில் தொடர்பு உள்ளதா? என்ற சந்தேகங்கள் எழுகின்றன. உதய கம்மன்பிலவை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன்  வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில்   வெள்ளிக்கிழமை (26)  நடைபெற்ற  போதைப்பொருள் அச்சுறுத்தலினை எதிர்த்துப் போராடுதல் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு  விவாதத்தில்  உரையாற்றுகையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் அரசாங்கம் முன்னெடுக்கும் பல விடயங்களை   ஆதரிக்க வேண்டும். போதைப்பொருள் வியாபாரத்தில் வடக்கு மற்றும்  கிழக்கு இளைஞர்களே அதிகளவில் இலக்கு வைக்கப்படுகின்றனர். இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக உழைக்கும் அனைவருக்கும் எங்களின் ஆதரவை நாங்கள் தெரிவிக்கின்றோம். இதேவேளை காணாமல் போனோர் விடயத்தில் எமது ஆஜர் ராயப்பு ஜோசப் 146,644 பேர் காணாமல் போயுள்ளதாக கூறியிருந்தார். அவரின்  வெளிப்படுத்தலே  ஐக்கிய நாடுகள்  வபை  வரையில் சென்றுள்ளது. இப்போது செம்மணியில் 409 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது ஆஜர் கூறிய எண்ணிக்கையை விட அதிகமாகுமா என்ற கேள்விகளும் எழுகின்றன. உலகத்தில் மனித எச்சங்கள் அதிகளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதென்றால் அது செம்மணியாகவே இருக்கும். அங்கிருந்து மீட்கப்படும் குழந்தைகளின் எச்சங்களை பார்க்கும் போது எந்தளவுக்கு சித்திரவதை செய்யப்பட்டிருப்பார்கள் என்று எண்ணத் தோன்றுகின்றது. இவற்றை பகுப்பாய்வு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது. இந்த நடவடிக்கைகளை உடனடியாக செய்ய வேண்டும். அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விடயத்தில் அது தொடர்பில் துரிதமாக விசாரணைகளை நடத்த வேண்டும். சுரேஷ் சலே சித்திரவதை செய்யப்படுகின்றார். அவர் உண்ணாவிரதம் இருக்கின்றார் என்றெல்லாம் கூறும் போது உதயகம்மன்பில உள்ளிட்ட எதிர்க்கட்சியில் உள்ளோர் துள்ளிக் குதிக்கின்றனர். இந்த விடயத்தில் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும். அவரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும். அவர் துள்ளுவதை பார்த்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் அவருக்கும் தொடர்பு உள்ளதா? என்ற சந்தேகங்கள் எழுகின்றன. இதனால் அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும். பிழையை மறைப்பதற்காக துள்ளுகின்ற செயற்பாட்டை காணமுடிகின்றது. இதனால் அவர் தொடர்பில் விசாரணைகளை நடத்த வேண்டும் என்றார்.