தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கிய கூட்டணியின் பிரதிநிதிகள் இன்று (03) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். சந்திப்பின் போது புதிய அரசியலமைப்பை உருவாக்குதல், மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்து…
தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கிய கூட்டணியின் பிரதிநிதிகள் இன்று (03) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர்.
சந்திப்பின் போது புதிய அரசியலமைப்பை உருவாக்குதல், மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துதல், வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அரசியலமைப்பு திருத்தம் அவசியமானதுடன், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பது அரசாங்கத்தின் கொள்கை என ஜனாதிபதி தெரிவித்தார். அதேவேளை, அனைத்து சமூகங்களின் ஒத்துழைப்புடனும் மக்கள் ஏற்றுக்கொள்ளும் புதிய சமூக ஒப்பந்தத்தின் அடிப்படையில் அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்காக தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, அதனுடன் தொடர்புடைய சிக்கல்கள் குறித்து அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடத் தயாராக இருப்பதாகக் கூறினார்.
மேலும், மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்குதல், போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு புதிய வீடுகள் அமைத்தல், வடக்கு மற்றும் மத்திய மலைநாட்டின் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பல முக்கிய தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.












