முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் சக மாணவர்களை இரும்புக் கம்பியால் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று பாட…
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் சக மாணவர்களை இரும்புக் கம்பியால் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேற்று பாடசாலை நேரத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், உயர்தர வகுப்பில் புதிதாக இணைந்திருந்த மூன்று மாணவர்கள் இரும்புக் கம்பியுடன் மற்றொரு வகுப்பறைக்குள் நுழைந்து அங்கு கல்வி கற்றுக்கொண்டிருந்த மாணவர்களை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.விளக்கமறியல் உத்தரவு
இந்த தாக்குதலில் இரு மாணவர்கள் பலத்த காயமடைந்த நிலையில், அவர்கள் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பத்தினரும் உறவினர்களும் பாடசாலை வளாகத்தில் ஒன்றுகூடி எதிர்ப்பை வெளியிட்டதுடன், இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.
இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று மாணவர்களையும் கைது செய்த புதுக்குடியிருப்பு பொலிஸார், அவர்களை நேற்று (14.07.2026) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், கைது செய்யப்பட்ட மாணவர்களை 21.07.2026 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.
இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களை அடையாளம் காணும் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

