1897ஆம் ஆண்டின் 03ஆம் இலக்க தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கான நடவடிக்கைகளுக்காக மீளாய்வுக் குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தொற்று நோய்கள் பரவுவதைத் தடுப்பதற்கும், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கும…

1897ஆம் ஆண்டின் 03ஆம் இலக்க தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கான நடவடிக்கைகளுக்காக மீளாய்வுக் குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தொற்று நோய்கள் பரவுவதைத் தடுப்பதற்கும், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் இலங்கையில் பிரதான சட்டமாக இந்தக் கட்டளைச் சட்டம் காணப்படுகிறது.

எனினும், உள்நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் மக்கள், பொருட்கள் மற்றும் சேவைகளின் இயக்கம் அதிகரித்துள்ளதுடன், சர்வதேச பயணங்கள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளின் விரிவாக்கம் காரணமாக தொற்று நோய்கள் நாடுகளுக்கு இடையே வேகமாகப் பரவும் அபாயமும் அதிகரித்துள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில், 1897ஆம் ஆண்டின் தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கு 2016ஆம் ஆண்டிலேயே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது. எனினும், அதற்கான திருத்தச் சட்டமூலம் இதுவரை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.

இதனையடுத்து, சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைய, தற்போது தயாரிக்கப்பட்டுள்ள திருத்தச் சட்டமூலத்தை மீளாய்வு செய்வதற்கு குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

கடந்த காலங்களில் ஏற்பட்ட தொற்றுநோய் நிலைமைகளின்போது பெறப்பட்ட அனுபவங்களை கருத்திற்கொண்டு, சமகால சுகாதார சவால்களுக்கும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய தொற்றுநோய் அபாயங்களுக்கும் திறம்பட முகங்கொடுக்கக்கூடிய வகையில் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களை இந்தக் குழு பரிந்துரைக்கவுள்ளது.