நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தங்கியிருக்கும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா காணொளி ஊடாக அரசியல் நிகழ்வில் உரையாற்ற திட்டமிட்டுள்ளமை தொடர்பில், இந்தியா தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துமாறு பங்களாதேஷ் அரசாங்கம் எச்சரித்துள்ளது. தப்பியோடிய ஒருவர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட அன…

நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தங்கியிருக்கும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா காணொளி ஊடாக அரசியல் நிகழ்வில் உரையாற்ற திட்டமிட்டுள்ளமை தொடர்பில், இந்தியா தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துமாறு பங்களாதேஷ் அரசாங்கம் எச்சரித்துள்ளது.

தப்பியோடிய ஒருவர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்கப்படுவது, இரு நாடுகளுக்கும் இடையிலான வளர்ந்து வரும் இருதரப்பு உறவுகளைப் பாதிக்கக்கூடும் எனவும் டாக்கா எச்சரித்துள்ளது.

ஹசீனாவின் அரசாட்சியை கவிழ்த்த மாணவர் தலைமையிலான எழுச்சியின் இரண்டாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, தில்லியில் உள்ள தெற்காசிய வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கம் (FCCSA) ஆகஸ்ட் 5 ஆம் திகதி ஏற்பாடு செய்துள்ள நிகழ்வில் அவர் இணைய வழியில் உரையாற்ற திட்டமிட்டுள்ளார். இது தொடர்பில் பங்களாதேஷ் வெளிவிடுத்த முதல் அதிகாரப்பூர்வ எதிர்வினை இதுவாகும்.

"நாங்கள் இந்தியாவுடன் முன்னோக்கிச் செல்லும் ஒரு அணுகுமுறையுடனேயே நகர்ந்து வருகிறோம். அந்த முன்னேற்றம் பாதிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எனவே, இந்தியா தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும்" என்று பங்களாதேஷின் வெளிவிவகாரத்துறை இணை அமைச்சர் ஷமா ஒபைத் இஸ்லாம் திங்கட்கிழமை இரவு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஹசீனா மற்றும் பிற அவாமி லீக் தலைவர்கள் இந்திய மண்ணிலிருந்து அரசியல் அறிக்கைகளை வெளியிடுவது குறித்து பங்களாதேஷ் தொடர்ச்சியாக இந்தியாவிடம் தனது கவலைகளைத் தெரிவித்து வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், தப்பியோடிய குற்றவாளிகளின் அறிக்கைகளால் இந்தியா - பங்களாதேஷ் உறவுகள் பாதிக்கப்படுவதை தாங்கள் விரும்பவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிகழ்வை இந்திய அரசாங்கம் ஏற்பாடு செய்யவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய இஸ்லாம், தேவைப்பட்டால் டாக்கா இராஜதந்திர வழிகள் மூலம் இந்த விவகாரத்தை எழுப்பும் என்றார். இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்திடமிருந்து உடனடியாக எந்தவிதமான பதிலும் அளிக்கப்படவில்லை.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறியதுடன், பிப்ரவரி மாதத் தேர்தலில் தாரிக் ரஹ்மான் அரசாங்கம் பொறுப்பேற்றதிலிருந்து இரு நாடுகளும் உறவுகளைப் புதுப்பிக்க முயற்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.