திரவ உணவுகளில் உள்ள சீனியின் அளவு குறித்த வர்ணக் குறியீட்டு லேபிளிங் உத்தரவுகளைத் திருத்தி புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் தாங்கள் உட்கொள்ளும் திரவ உணவுகளில் உள்ள சீனியின் அளவை துல்லியமாகவும் இலகுவாகவும் அடையாளம் காணும் வகையிலான ஏற்பாடுகளை மேலும் வலுப்…

திரவ உணவுகளில் உள்ள சீனியின் அளவு குறித்த வர்ணக் குறியீட்டு லேபிளிங் உத்தரவுகளைத் திருத்தி புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நுகர்வோர் தாங்கள் உட்கொள்ளும் திரவ உணவுகளில் உள்ள சீனியின் அளவை துல்லியமாகவும் இலகுவாகவும் அடையாளம் காணும் வகையிலான ஏற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், 1980 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க உணவுச் சட்டத்தின் கீழ், திரவ உணவுகளுக்கான வர்ணக் குறியீட்டு முறை திருத்தப்பட்டு, இந்த புதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, உணவு ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகளை கவனத்திற்கொண்டு இந்த உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். இது 2026 ஜூன் 23 ஆம் திகதியிடப்பட்ட 2494/06 ஆம் இலக்க இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தத் திருத்தங்களின் மூலம், திரவ உணவுப் பொதிகளில் சீனியின் அளவைக் குறிக்கும் வர்ணக் குறியீட்டு சின்னங்களை மிகவும் தெளிவாகவும் சீரான முறையிலும் காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன், கண்ணாடிப் போத்தல்கள் போன்ற வரையறுக்கப்பட்ட அச்சு இடவசதி கொண்ட பொதிகளுக்குப் பயன்படுத்தக்கூடிய மாற்றுச் சின்னமொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், சின்னத்தின் அளவு, நிறம், "சீனி / Sugar" என்று குறிப்பிடப்பட வேண்டிய விதம் மற்றும் சீனியின் அளவைக் காட்சிப்படுத்துதல் தொடர்பான புதிய தொழில்நுட்பத் தரநிலைகளும் இந்தத் திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்யப்படாது, உணவு தயாரிப்பு அல்லது மீள் விற்பனைக்காக மாத்திரம் பயன்படுத்தப்படும் வணிக ரீதியான (Business to Business - B2B) உணவுப் பொருட்களுக்கான விசேட ஏற்பாடுகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

திருத்தப்பட்ட அட்டவணைக்கு அமைய, திரவ உணவுகளில் உள்ள சீனியின் அளவுகள் பின்வரும் வர்ணக் குறியீடுகள் மூலம் காட்டப்பட வேண்டும்:

100 மில்லி லீட்டருக்கு 8.0 கிராமுக்கு மேல் சீனி இருந்தால் – சிவப்பு (Red)

100 மில்லி லீட்டருக்கு 2.5 கிராம் முதல் 8.0 கிராம் வரை சீனி இருந்தால் – அம்பர் (Amber)

100 மில்லி லீட்டருக்கு 2.5 கிராமுக்குக் குறைவாக சீனி இருந்தால் – பச்சை (Green)

இந்த புதிய திருத்தங்கள் மூலம், நுகர்வோர் தாம் உட்கொள்ளும் பானங்களில் உள்ள சீனியின் அளவு குறித்த சரியான தகவல்களை இலகுவாகப் புரிந்துகொள்ள முடிவதோடு, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை ஊக்குவித்தல், தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய முயற்சிகளை வலுப்படுத்துதல் மற்றும் உணவு லேபிளிங் முறையை சர்வதேச தரத்திற்கு ஏற்ப ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றை எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.