திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் ஊடாக 3.1 கிலோகிராம் எடையுள்ள சிறுநீர்ப்பை கல் அகற்றப்பட்ட சம்பவம் உலக சாதனையாகப் பதிவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், கடந்த 2003 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டில் நோயாளி ஒருவர…
திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் ஊடாக 3.1 கிலோகிராம் எடையுள்ள சிறுநீர்ப்பை கல் அகற்றப்பட்ட சம்பவம் உலக சாதனையாகப் பதிவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், கடந்த 2003 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டில் நோயாளி ஒருவரிடமிருந்து 1.9 கிலோகிராம் எடையுள்ள கல் அகற்றப்பட்டதே உலக சாதனையாக பதிவாகியிருந்தது
சத்திரசிகிச்சையை மேற்கொண்ட மருத்துவ குழாம் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.பிரேசில் நாட்டில் நோயாளியின் 1.9 கிலோகிராம் கல்
இந்த விடயம் தொடர்பான சாதனைப் புத்தக அங்கீகாரம் குறித்து அதிகாரப்பூர்வ சரிபார்ப்பு மற்றும் ஆவணப்படுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது என மருத்துவத் தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர். முன்னதாக பிரேசிலில் அகற்றப்பட்ட சிறுநீரகக் கல் தொடர்பான பதிவுகள் குறிப்பிடப்பட்டாலும், திருகோணமலை மருத்துவமனையில் அகற்றப்பட்ட கல்லை உலக சாதனையாக உறுதிப்படுத்துவதற்கு உரிய சர்வதேச பதிவுகள் மற்றும் மருத்துவ ஆவணங்களுடன் ஒப்பீடு செய்யப்பட வேண்டியது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, திருகோணமலை மருத்துவமனையில் 52 வயதான ஆண் ஒருவரின் சிறுநீரகப் பையில் இருந்து 3.1 கிலோகிராம் நிறையுடைய பாரிய கல் கடந்த வெள்ளிக் கிழமை வெற்றிகரமாக அகற்றப்பட்டது.
சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினரால் இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சுமார் 21 சென்றிமீற்றர் நீளமும் 3 கிலோ 100 கிராம் நிறையும் கொண்ட இந்தக் கல், நோயாளி நீண்டகாலமாக சிறுநீர் கழிப்பதில் சிரமத்தை எதிர்கொண்ட நிலையில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளின் போது கண்டறியப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பரிசோதனைகளின் அடிப்படையில் நோயாளிக்கு உடனடியாக சத்திர சிகிச்சை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டதுடன், சிக்கலான இந்த அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.












