வடகிழக்கில் தொல்லியல் ஊடாக சட்டரீதியாக என கூறப்படுகின்ற வகையில் திட்டமிட்ட முறையில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை பறித்தெடுத்து அவர்களின் வாழ்வாதார நிலங்களை சிதைப்பதற்கான நடவடிக்கையை மிக நுட்பமான முறையில் இந்த அரசு செய்து வருகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி ச…

வடகிழக்கில் தொல்லியல் ஊடாக சட்டரீதியாக என கூறப்படுகின்ற வகையில் திட்டமிட்ட முறையில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை பறித்தெடுத்து அவர்களின் வாழ்வாதார நிலங்களை சிதைப்பதற்கான நடவடிக்கையை மிக நுட்பமான முறையில் இந்த அரசு செய்து வருகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்கள் கடந்தும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் தொடர்பில் எந்தவொரு தெளிவான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என தெரிவித்தார்.

13ஆவது திருத்தச்சட்டத்தின் கீழான மாகாணசபை முறைமையும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் இருப்பதாகவும், தமிழ் மக்களின் பொருளாதார மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுக்கான திட்டங்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கித்துள் முந்தனை ஆறு நீர்ப்பாசன திட்டம், விவசாயம், மீன்பிடி மற்றும் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் போன்ற முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் தாமதமடைவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை விவகாரத்தில் ஜனாதிபதி தலைமையிலான கூட்டங்களில் உறுதிமொழிகள் வழங்கப்பட்ட போதிலும், நடைமுறை நடவடிக்கைகள் மந்தமாக இடம்பெறுவதாகவும் தெரிவித்தார்.

தொல்லியல் ஆய்வுகள் என்ற பெயரில் பௌத்த அடையாளங்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு, அதன் ஊடாக தமிழ் மக்களின் நில உரிமைகள் மற்றும் பாரம்பரிய பகுதிகள் பாதிக்கப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

செம்மணி மனித எச்சங்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் டி.என்.ஏ பரிசோதனைகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் அரசு செயற்பட வேண்டும் என்றும் இளையதம்பி சிறிநாத் வலியுறுத்தினார்.