மனிதர்களின் திருமணங்களே பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட மனித வடிவ ரோபோவான ‘பு சுனைதா’ திருமணம் செய்துகொண்டதாக வெளியான பதிவு சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. குறித்த ரோபோ, தன்னை விட அழகான ‘மோசா’ என்ற மற்ற…

மனிதர்களின் திருமணங்களே பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட மனித வடிவ ரோபோவான ‘பு சுனைதா’ திருமணம் செய்துகொண்டதாக வெளியான பதிவு சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

குறித்த ரோபோ, தன்னை விட அழகான ‘மோசா’ என்ற மற்றொரு ரோபோவை திருமணம் செய்துகொண்டதாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது.

துபாயில் கடந்த 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதன்முறையாக மனிதர்களைப் போன்று சாலையில் நடந்து சென்ற ரோபோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாக பேசுபொருளானது. பின்னர், அது அமீரகத்தின் கவனத்தையும் ஈர்த்ததுடன், அமீரக துணை அதிபர் ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் நேரில் அழைத்து அதன் செயல்பாடுகளை பார்வையிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த ரோபோ, துபாய் எதிர்கால ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட ஜி-1 (G-1) மனித வடிவ ஹுமனாய்டு ரோபோ எனவும், அதற்கு தற்போது ‘பு சுனைதா’ என பெயரிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை ரோபோட்டிக்ஸ் பொறியாளர்கள் டாக்டர் அகமது அல் அத்தார் மற்றும் மைதா அல் கைத்தி ஆகியோர் உருவாக்கி இயக்கி வருகின்றனர்.

மனிதர்களின் அசைவுகளைப் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்படும் இவ்வகை ரோபோக்கள் ஹுமனாய்டு ரோபோக்கள் என அழைக்கப்படுகின்றன. இவை மனிதர்களின் செயல்பாடுகளை ஒத்த வகையில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு முன்னர், பக்ரீத் பண்டிகையின்போது பாரம்பரிய உடை அணிந்து தொழுகையில் பங்கேற்றதாக வெளியான காணொளி காரணமாகவும் ‘பு சுனைதா’ ரோபோ சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், கடந்த 1ஆம் திகதி திருமணம் நடைபெற்றதாகக் குறிப்பிடப்பட்டு, கருப்பு நிற அபாயா அணிந்த ‘மோசா’ ரோபோவுடன் பாரம்பரிய கந்தூரா உடையில் காணப்படும் ‘பு சுனைதா’வின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன.

எனினும், இது உண்மையான சட்டபூர்வமான அல்லது மத ரீதியான திருமணம் அல்ல என்றும், ரோபோவை உருவாக்கிய நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒரு சமூக ஊடக பிரசாரப் பதிவாகவே இது பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமீரகத்தின் பண்பாடு மற்றும் முக்கிய நிகழ்வுகளை விளம்பரப்படுத்துவதற்காக ‘பு சுனைதா’ போன்ற செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த ‘திருமண’ பதிவு இணையவாசிகள் மத்தியில் ஆச்சரியத்தையும் நகைச்சுவையான கருத்துக்களையும் ஏற்படுத்தியுள்ளது.