உள்ளூராட்சி மன்றங்களின் சொத்தாக மாறியுள்ள நாட்டின் கழிவுமுகாமைத்துவத்தை அரசாங்கத்தால் மட்டும் தனியாகச் செய்ய முடியாது பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத் 'தூய்மையான நகரம்' தேசியக் கழிவு முகாமைத்துவத் திட்டத்தின் (2026-2029) எதிர்கால செயற்தி…
உள்ளூராட்சி மன்றங்களின் சொத்தாக மாறியுள்ள நாட்டின் கழிவுமுகாமைத்துவத்தை அரசாங்கத்தால் மட்டும் தனியாகச் செய்ய முடியாது பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத்
'தூய்மையான நகரம்' தேசியக் கழிவு முகாமைத்துவத் திட்டத்தின் (2026-2029) எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று (06) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் எண்ணக்கருவிற்கு அமைவாக, நாட்டின் கழிவு முகாமைத்துவப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வைக் காண்பதை நோக்கமாகக் கொண்டு, 'கிளீன் ஸ்ரீலங்கா' செயலகத்தின் தலையீட்டில் 'தூய்மையான நகரம்' தேசியக் கழிவு முகாமைத்துவத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
உலகின் வளர்ந்த நாடுகளில் செயல்படுத்தப்படும் கழிவு முகாமைத்துவத் திட்டங்களை ஆராய்ந்து, உள்நாட்டு நிபுணர்களின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளைப் பெற்று, கழிவுகளை முறையாக முகாமைத்துவம் செய்வது மற்றும் புதிய கழிவு மீள்சுழற்சி திட்டங்களைத் தொடங்குவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் 'கிளீன் ஸ்ரீலங்கா' தேசியத் திட்டத்தின் முழுமையான மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், உள்ளூராட்சி மன்றங்களின் முழுமையான பங்கேற்புடன் அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த 'தூய்மையான நகரம்' கழிவு முகாமைத்துவ தேசியத் திட்டம் செயல்படுத்தப்படும்.
இந்தக் கலந்துரையாடலில், அனைத்து மாவட்டங்களிலும் கழிவு முகாமைத்துவம் தொடர்பான பிரச்சினைகள், சேகரிக்கப்பட்ட தரவுகள், முன்மொழியப்பட்ட தீர்வுகள் மற்றும் அவற்றைச் செயல்படுத்தும்போது எழக்கூடிய சவால்கள் குறித்தும் விரிவாக கவனம் செலுத்தப்பட்டது.
அரசின் தலையீட்டின் மூலம் வீடுகளில் பசளை தயாரிப்பதற்குத் தேவையான விஞ்ஞானபூர்வ உதவியை வழங்குதல், கழிவுகளைப் பிரித்தல், கழிவு மீள்சுழற்சி செய்தல், அவற்றிலிருந்து வருமானம் ஈட்டுவதற்கான வழிகளை உருவாக்குதல், கழிவு சேகரிப்பை முறைப்படுத்துதல் போன்றவை குறித்து ஆராயப்பட்டது.
மக்காத மற்றும் மக்கக்கூடிய கழிவுகளை மீள்சுழற்சி மையங்களுக்கு அனுப்ப வேண்டியதன் அவசியம் மற்றும் கழிவுகளை முறையற்ற விதத்தில் வீசும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது. மேலும், முறையற்ற விதத்தில் கழிவுகளைக் கொட்டுபவர்கள் பற்றிய தகவல்களை வழங்குவதற்கு விசேட தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
இது தவிர, கரையோரப் பகுதிகளில் சேரும் கழிவுகள், மருத்துவக் கழிவுகள் (Medical waste), துறைமுகங்கள் சார்ந்த பகுதிகளில் சேரும் பைபர் மற்றும் வலைகள்,கருவிகள் உள்ளிட்ட கழிவுகளை முகாமைத்துவம் செய்வது குறித்தும் ஆராயப்பட்டது.
நாட்டின் கழிவு முகாமைத்துவத்திற்குத் தேவையான அடிப்படைத் தலையீடுகள் தற்போது செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது கழிவு என்பது உள்ளூராட்சி மன்றங்களின் சொத்தாக மாறியுள்ளதால் கழிவுப் பிரச்சினையைத் தீர்ப்பதை அரசாங்கத்தால் மட்டும் தனியாகச் செய்ய முடியாது என்றும் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத் சுட்டிக்காட்டினார்.
அனைத்து மாவட்டங்களிலும் கழிவுகளை அகற்றுவது தற்போது தீவிரப் பிரச்சினையாக மாறியுள்ளதாகவும், பல்வேறு சந்தர்ப்பங்களில் கழிவு முகாமைத்துவம் தொடர்பான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட போதிலும், அவற்றின் மூலம் நிரந்தர திட்டங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
நீண்ட காலமாக நிலவி வரும் கழிவுப் பிரச்சினைகளுக்கு உள்ளூராட்சி மன்றங்களால் மட்டுமே தனியாகத் தீர்வு காண முடியாது என்றும், எனவே அரசாங்கத்தின் தலையீட்டின் கீழ் முழு அரச பொறிமுறையையும் ஒருங்கிணைத்து விஞ்ஞான ரீதியான திட்டங்களைத் தயாரிப்பதன் மூலம் கழிவுகளை நிர்வகிப்பதற்குத் தேவையான நிரந்தரத் தீர்வின் அவசியத்தை அரசாங்கம் கண்டறிந்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் ருவன் செனரத் மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நாட்டின் கழிவுப் பிரச்சினை பல ஆண்டுகளாக நிலவி வரும் ஒரு பிரச்சினை என்றும், இந்த கழிவுப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண அரசாங்கம் 30 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மூன்று கட்டங்களின் கீழ் இந்த தேசிய முகாமைத்துவத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதியின் செயலாளர், இதற்காக அனைவரின் கருத்துக்களையும் யோசனைகளையும் பெற்று கழிவு முகாமைத்துவத்திற்கு நிரந்தரத் தீர்வு காண்பது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.
இதற்காக புதிய விஞ்ஞான ரீதியான முறைகளைப் பயன்படுத்துவதும், மக்களின் நடத்தை முறைகள் மற்றும் மனப்பாங்கு மாற்றங்கள் மூலம் நிலையான தீர்வைக் காண முடியும் என்றும், அவ்வாறு செய்யாமல் கழிவு பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காண முடியாது என்றும் ஜனாதிபதியின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
கழிவு முகாமைத்ததுவத்திற்கு பலதரப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்றும், நாட்டில் கழிவு முகாமைத்துவத்திற்காக 'கிளீன் ஸ்ரீலங்கா' செயலகத்தால் செயல்படுத்தப்படும் 'தூய்மையான நகரம்' தேசியத் திட்டத்தை வெற்றியடையச் செய்ய அனைவரின் ஒத்துழைப்பும் தேவை என்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மேலும் தெரிவித்தார்.
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார, வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் செயலாளர் பொறியாளர் குமுதுலால் போகஹவத்த, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர், 'கிளீன் ஸ்ரீலங்கா' ஜனாதிபதி செயலணியின் செயலாளர் மற்றும் அழைப்பாளர் ரசல் அபொன்சு, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ('கிளீன் ஸ்ரீலங்கா' திட்டம்) எஸ். பி. சி. சுகீஷ்வர, மேல் மாகாண கழிவு முகாமைத்துவ அதிகார சபையின் தலைவர், நிபுணத்துவ குழு உறுப்பினர் சதுர கஹந்தவாரச்சி, பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், உள்ளுராட்சி ஆணையாளர்கள், மேலதிக செயலாளர்கள், மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவர்கள், கழிவு முகாமைத்துவ நிபுணத்துவ குழு உறுப்பினர்கள், 'கிளீன் ஸ்ரீலங்கா' செயலகத்தின் மாவட்ட மற்றும் மாகாண ஒருங்கிணைப்பாளர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த சந்திப்பில் பங்கேற்ற னர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு 06.08.2026












