கிழக்கு சீனாவை 'டொல்பின்' (Dolphin) சூறாவளி தாக்கியுள்ளதைத் தொடர்ந்து, அந்நாட்டின் நிதித் தலைநகரான ஷாங்காய் உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து 10 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்தச் சூறாவளி காரணமா…

கிழக்கு சீனாவை 'டொல்பின்' (Dolphin) சூறாவளி தாக்கியுள்ளதைத் தொடர்ந்து, அந்நாட்டின் நிதித் தலைநகரான ஷாங்காய் உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து 10 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்தச் சூறாவளி காரணமாக பிராந்தியம் முழுவதும் பலத்த மழை பெய்து வருவதுடன், போக்குவரத்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. திங்கள்கிழமை அன்று ஷாங்காயில் மட்டும் சுமார் 1,000 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

டொல்பின் சூறாவளி தற்போது வெப்பமண்டல புயலாக வலுவிழந்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ள போதிலும், புயல் வடக்கு நோக்கி நகர்வதால் புதன்கிழமை வரை கனமழை, கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் குறித்து தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

சீனாவில் நடப்பு ஆண்டில் தாக்கிய மிக வலுவான புயலான டால்பினுக்கு, சீன அதிகாரிகள் முன்னதாக நாட்டின் மிக உயர்ந்த 'சிவப்பு எச்சரிக்கை' (Red Alert) விடுத்திருந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை மாலை 17:30 (09:30 GMT) மணியளவில் ஜெஜியாங் (Zhejiang) மாகாணத்தில் உள்ள யுஹுவான் (Yuhuan) பகுதியில் மணிக்கு 150 கி.மீ (94 மைல்) வேகத்தில் முதன்முதலாக நிலத்தைக் கடந்த இப்புயல், அதன்பின் சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு வென்ஜோ (Wenzhou) நகரத்தில் இரண்டாவது முறையாக நிலத்தைக் கடந்தது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திங்கள்கிழமை அன்று ஷாண்டாங் (Shandong), ஹெனான் (Henan), ஹுபே (Hubei), அன்ஹுய் (Anhui), ஜியாங்சு (Jiangsu), ஜெஜியாங் ஆகிய மாகாணங்களுக்கும் ஷாங்காய் நகரத்திற்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

மக்கள் தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளதுடன், ஷாங்காயில் உள்ள டிஸ்னிலாண்ட் (Disneyland), லெகோலேண்ட் (Legoland) மற்றும் 'தி பண்ட்' (The Bund) பகுதியில் உள்ள பார்வையாளர் தளங்கள் உள்ளிட்ட முன்னணி சுற்றுலாத் தலங்கள் பல தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் ஷாங்காயின் பிரெஞ்சு கொன்செஷன் (French Concession) பகுதியில் தரைத்தளத்தில் உள்ள கடைகள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதையும், மக்கள் கணுக்கால் அளவு நீரில் நடந்து செல்வதையும் அரசு ஊடகக் காட்சிகள் காட்டுகின்றன.

ஜெஜியாங் மாகாணத்தின் வென்லிங் (Wenling) பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவன் ஒருவன் கடலலையால் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக பல அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், சீன அதிகாரிகள் இதுவரை உத்தியோகபூர்வமாக உயிரிழப்புகள் எதையும் உறுதிப்படுத்தவில்லை.

அடுத்த சில நாட்களில் ஜெஜியாங் மாகாணத்தின் சில பகுதிகளில் 250 மி.மீ முதல் 500 மி.மீ வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

கடும் காற்று மற்றும் வெள்ளப்பெருக்குக்கு மத்தியில் தங்களது வாகனங்களைப் பாதுகாப்பாக நிறுத்துவதற்காக, ஜெஜியாங் மாகாணத் தலைநகரான ஹங்ஜோவில் (Hangzhou) உள்ள அனைத்து பொது இடங்களிலும் வாகன நிறுத்தக் கட்டணத்தை அதிகாரிகள் தள்ளுபடி செய்துள்ளனர்.

இதே மாகாணத்தின் வென்ஜோ பகுதியில் அதிகாரிகள் சுமார் 900,000 குடியிருப்பாளர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியுள்ளதுடன், 1,000 க்கும் மேற்பட்ட அவசரகால நிவாரண முகாம்களையும் திறந்துள்ளனர். மேலும் தைஜோ (Taizhou) நகரத்தில் சுமார் 390,000 மக்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கடலோர மாகாணமான புஜியனில் (Fujian), கடல்சார் அதிகாரிகள் பல பயணிகள் படகுப் பாதைகளின் சேவைகளை இடைநிறுத்தியுள்ளதுடன், 100 க்கும் மேற்பட்ட கடலோர கட்டுமானத் திட்டங்களையும் நிறுத்தியுள்ளனர்.

இச்சூறாவளி நிலத்தைக் கடப்பதற்கு முன் சுமார் 6,000 கி.மீ தொலைவுக்குப் பயணித்துள்ளது. இது ஒரு சாதாரண புயலின் ஆயுட்காலத்தை விட மூன்று மடங்கு அதிகம் என சீனாவின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான CCTV தெரிவித்துள்ளது.

மேலும், இப்புயல் மிகப்பெரிய சுழற்சி அளவையும், கடுமையான மழைப்பொழிவுத் திறனையும் கொண்டுள்ளதாக CCTV செய்தி வெளியிட்டுள்ளது.

இதனிடையே, இப்புயல் குறித்த போலிச் செய்திகள் சீன இணையதளங்களில் அதிவேகமாகப் பரவிய நிலையில், தவறான தகவல்களைப் பரப்பிய இருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அவர்களில் 60 வயது நபர் ஒருவர், சூறாவளியின் போது ஷாங்காயில் ஒருவர் கட்டிடத்திலிருந்து கீழே விழுந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் போலி வீடியோ ஒன்றை உருவாக்கியுள்ளார். மற்றுமொரு 32 வயது நபர், சமூக வலைதளங்களில் பிற பயனர்கள் பதிவிட்ட புயல் காட்சிகளைத் தவறாகச் சித்தரிக்கும் வகையில் மீண்டும் படத்தொகுப்பு (Re-edit) செய்து வெளியிட்டுள்ளார்.

சீனாவைத் தாக்குவதற்கு முன்னர், டொல்பின் சூறாவளி பிலிப்பைன்ஸ், வடக்கு தைவானின் சில பகுதிகள் மற்றும் ஜப்பானின் ஒகினவா (Okinawa) தீவு ஆகியவற்றில் கனமழையை ஏற்படுத்தியது.

டொல்பின் சூறாவளி மற்றும் வாரத்தின் தொடக்கத்தில் வீசிய புயல் காரணமாகப் பெய்த பலத்த பருவமழையால் பிலிப்பைன்ஸில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் சிவில் பாதுகாப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 7,000 க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

ஜப்பானின் ஒகினவாவில் ஐந்து முதியவர்கள் லேசான காயங்களுக்கு உள்ளானதாக மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது. பலத்த காற்று காரணமாக அவர்களில் மூவர் கீழே விழுந்து காயமடைந்தனர்.