உலகளாவிய உணவுச் சுற்றுலாத் துறையில் (Culinary Tourism) இலங்கை மற்றுமொரு மைல்கல்லை எட்டியுள்ளது. பிரபல சர்வதேச சுற்றுலா இதழான “டிராவல் அண்ட் டூர் வேர்ல்ட்” (Travel And Tour World - TTW) வெளியிட்டுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான "உலகின் தலைசிறந்த 50 உணவு நாடுகள்" பட்டியலில் இலங்கை பெருமைய…
உலகளாவிய உணவுச் சுற்றுலாத் துறையில் (Culinary Tourism) இலங்கை மற்றுமொரு மைல்கல்லை எட்டியுள்ளது. பிரபல சர்வதேச சுற்றுலா இதழான “டிராவல் அண்ட் டூர் வேர்ல்ட்” (Travel And Tour World - TTW) வெளியிட்டுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான "உலகின் தலைசிறந்த 50 உணவு நாடுகள்" பட்டியலில் இலங்கை பெருமையுடன் இடம்பிடித்துள்ளது. சர்வதேச அளவில் உலக நாடுகளின் சமையல் பாரம்பரியம், பிராந்திய உணவு வகைப்பாடு, வீதி உணவு கலாசாரம் , நளினமான உணவகங்கள், உள்நாட்டுப் பொருட்கள், நிலைத்தன்மை, பாரம்பரிய பானங்கள் மற்றும் கலாசார நம்பகத்தன்மை ஆகிய முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இலங்கை உணவுகளின் தனித்துவமான சுவை, நறுமணமிக்க வாசனைப் பொருட்கள், புத்தம் புதிய கடல் உணவுகள் மற்றும் வெப்பமண்டல உணவுப் பொருட்கள் உலகளாவிய உணவுப் பிரியர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளதாக இந்த இதழ் சுட்டிக்காட்டியுள்ளது.இலங்கை என்பது நறுமணமிக்க வாசனைப் பொருட்கள்மற்றும் பல நூற்றாண்டு கால கலாசார தாக்கங்கள் இணைந்து மறக்க முடியாத உணவு அனுபவங்களை வழங்கும் ஒரு துடிப்பான தேசமாகும். பரபரப்பான வீதி உணவுக் கடைகள் முதல் கடற்கரையோர நேர்த்தியான உணவகங்கள் வரை இங்கு பலதரப்பட்ட சுவைகளை அனுபவிக்க முடியும்" என புகழாரம் சூட்டப்பட்டுள்ளது. பாரம்பரிய சோறும் கறியும், ஆப்பம், கொத்து ரொட்டி, கடல் உணவு வகைகள் மற்றும் உள்நாட்டு இனிப்புப் பண்டங்கள் போன்றவை சர்வதேச அரங்கில் இலங்கையின் அடையாளத்தை மேலும் உயர்த்தியுள்ளன. இலங்கையின் சமையல் கலையை முழுமையாக அனுபவிக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் செல்ல வேண்டிய 10 முக்கிய இடங்களையும் இந்த இதழ் பட்டியலிட்டுள்ளது: 1. கொழும்பு: சோறும் கறியும், கொத்து ரொட்டி, ஆப்பம் மற்றும் புதிய கடல் உணவுகள். 2. காலி: பிரசித்தி பெற்ற கடல் உணவுகள், இலங்கை கறிகள் மற்றும் காலணித்துவ காலத்து உணவகங்கள். 3. கண்டி: பாரம்பரிய சோறும் கறியும் மற்றும் உள்நாட்டு பாரம்பரிய இனிப்பு வகைகள். 4. நீர்கொழும்பு: கடல் உணவு கறிகள், சுடச்சுட வறுத்த மீன்கள் மற்றும் காயல் (Lagoon) உணவுச் சிறப்புகள். 5. எல்ல: இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் மலையக உணவு அனுபவங்கள். 6. யாழ்ப்பாணம்: உலகப் புகழ்பெற்ற நண்டுக்கறி, தோசை மற்றும் காரசாரமான தமிழ் பாரம்பரிய சுவைகள். 7. மிரிஸ்ஸ: புத்தம் புதிய கடல் உணவுகள் மற்றும் கடற்கரையோர தளர்வான உணவு அனுபவம். 8. நுவரெலியா: தேயிலை சார்ந்த உணவு வகைகள், பேஸ்ட்ரிகள் மற்றும் காலணித்துவ கால பாரம்பரிய உணவுகள். 9. ஹிக்கடுவ: கடல் உணவுகள், இலங்கை கறிகள் மற்றும் துடிப்பான கடற்கரை உணவகங்கள். 10. திருகோணமலை: புதிய கடல் உணவுகள் மற்றும் உண்மையான கடலோர உணவு கலாசாரம். இந்த சர்வதேசப் பட்டியலில் இந்த வரிசையில் முதல் இடத்தை மெக்ஸிக்கோவும், இரண்டாம் இடத்தை இத்தாலியும் மூன்றாம் இடத்தை ஸ்பெய்னும் வகிக்கின்றன. ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற உலகளாவிய பிராந்தியங்களின் முன்னணி உணவு நாடுகளுடன் இணைந்து இலங்கை இப்பட்டியலில் 50 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத நிலையான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் பாரம்பரிய சமையல் முறைகளைப் பாதுகாப்பதில் இலங்கை காட்டி வரும் அக்கறைக்குக் கிடைத்த சர்வதேச அங்கீகாரமாக இது பார்க்கப்படுகிறது.

