2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரில் அதிக கோல்களை அடித்த வீரராக முதலிடம் பிடித்து, ஃபிஃபா உலகக் கிண்ண வரலாற்றில் இரண்டு முறை 'கோல்டன் பூட்' (Golden Boot) விருதை வென்ற முதல் வீரர் என்ற சாதனையை பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே படைத்துள்ளார். இத்தொடரில் 8 போட்டிகளில…
2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரில் அதிக கோல்களை அடித்த வீரராக முதலிடம் பிடித்து, ஃபிஃபா உலகக் கிண்ண வரலாற்றில் இரண்டு முறை 'கோல்டன் பூட்' (Golden Boot) விருதை வென்ற முதல் வீரர் என்ற சாதனையை பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே படைத்துள்ளார். இத்தொடரில் 8 போட்டிகளில் விளையாடிய எம்பாப்பே 10 கோல்களை அடித்து, லியோனல் மெஸ்ஸியுடனான கடுமையான போட்டியை முறியடித்து இவ்விருதைக் கைப்பற்றினார். இதற்கு முன்னர் 2022 கட்டார் உலகக் கிண்ண தொடரிலும் 8 கோல்களை அடித்து எம்பாப்பே கோல்டன் பூட் விருதை வென்றிருந்தார். இதன் மூலம் அடுத்தடுத்த உலகக் கிண்ண தொடர்களில் இவ்விருதை வென்ற முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். 1970 ஆம் ஆண்டு மேற்கு ஜெர்மனியின் கெர்ட் முல்லருக்குப் பின்னர், ஒற்றை உலகக் கிண்ணத் தொடரில் 10 கோல்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை 27 வயதான எம்பாப்பே பெற்றுள்ளார். உலகக் கிண்ண வரலாற்றில் இவரை விட பிரான்ஸின் ஜஸ்ட் ஃபோன்டைன் (1958 இல் 13 கோல்கள்) மற்றும் ஹங்கேரியின் சாண்டோர் கோக்சிஸ் (1954 இல் 11 கோல்கள்) ஆகிய இருவர் மட்டுமே ஒரே தொடரில் அதிக கோல்களை அடித்துள்ளனர். உலகக் கிண்ண வரலாற்றில் ஒட்டுமொத்தமாக அதிக கோல்களை அடித்த ஆண்கள் பிரிவின் சாதனையாளராக எம்பாப்பே (22 கோல்கள்) உருவெடுத்துள்ளார். இதன் மூலம் லியோனல் மெஸ்ஸியை (21 கோல்கள்) அவர் முந்தியுள்ளார். சனிக்கிழமை நடைபெற்ற மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில் இங்கிலாந்திடம் பிரான்ஸ் 6-4 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து நான்காம் இடத்தைப் பிடித்தது. எனினும், இப்போட்டியில் எம்பாப்பே இரண்டு கோல்களை அடித்து மெஸ்ஸியை விட முன்னிலை பெற்றார். முன்னதாக குழு நிலைப் போட்டிகளில் செனகல் மற்றும் ஈராக் அணிகளுக்கு எதிராக தலா இரண்டு கோல்களையும், 32 அணிகள் சுற்றில் சுவீடனுக்கு எதிராகவும் அவர் கோல் அடித்தார். தொடர்ந்து, பராகுவேக்கு எதிரான 16 அணிகள் சுற்றில் 70ஆவது நிமிடத்தில் பெனால்டி மூலம் வெற்றி கோலையும், காலிறுதியில் மொராக்கோவுக்கு எதிராகவும் அவர் கோல் அடித்திருந்தார். ஞாயிற்றுக்கிழமை நியூஜெர்சியில் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஸ்பெயினிடம் அர்ஜென்டினா 1-0 எனத் தோல்வியடைந்தது. இப்போட்டியில் 39 வயதான லியோனல் மெஸ்ஸி ஹேட்ரிக் கோல் அடித்திருந்தால் எம்பாப்பேயை முந்தியிருக்கலாம், ஆனால் அவரால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.மெஸ்ஸி இத்தொடரில் 8 போட்டிகளில் 8 கோல்களுடன் நிறைவு செய்தார். இங்கிலாந்தின் ஜூட் பெலிங்ஹாம் மற்றும் நார்வேயின் எர்லிங் ஹாலாண்ட் ஆகியோர் தலா 7 கோல்களையும், பிரான்ஸின் உஸ்மான் டெம்பேலே மற்றும் இங்கிலாந்து அணியின் தலைவர் ஹரி கேன் ஆகியோர் தலா 6 கோல்களையும் அடித்து இத்தொடரை நிறைவு செய்துள்ளனர்.

