ஐக்கிய அமெரிக்காவில் முடிவுக்கு வந்த உலகக் கிண்ண கால்பந்தாட்ட காலிறுதிப் போட்டியில், பலப்பரீட்சை நடத்திய சுவிட்சர்லாந்தை மேலதிக நேரத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஆர்ஜென்டீனா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் மெகா அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை ஆர்ஜென்டீனா எ…

ஐக்கிய அமெரிக்காவில் முடிவுக்கு வந்த உலகக் கிண்ண கால்பந்தாட்ட காலிறுதிப் போட்டியில், பலப்பரீட்சை நடத்திய சுவிட்சர்லாந்தை மேலதிக நேரத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஆர்ஜென்டீனா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் மெகா அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை ஆர்ஜென்டீனா எதிர்கொள்கிறது.

பரபரப்பான போட்டியின் முக்கிய நிகழ்வுகள்

மெஸ்ஸியின் மாயாஜாலம் & மக் அலிஸ்டரின் முதல் கோல் (10ஆவது நிமிடம்): போட்டி தொடங்கிய 10ஆவது நிமிடத்திலேயே ஆர்ஜென்டினா ரசிகர்களுக்கு கொண்டாட்டம் கிடைத்தது. லியனல் மெஸ்ஸி உதைத்த மூலையுதையை அலெக்சிஸ் மக் அலிஸ்டர் மிக நேர்த்தியாக தலையால் முட்டிக் கோலாக மாற்றினார். நடப்பு உலகக் கிண்ணத் தொடரில் சுவிட்சர்லாந்து அணி பின்னடைவை சந்தித்தது இதுவே முதல்முறை.

சுவிஸ் அணியின் அசுரத்தனமான பதிலடி (67ஆவது நிமிடம்): முதல் பாதியில் ஆர்ஜென்டீனா ஆதிக்கம் செலுத்திய போதிலும், இரண்டாவது பாதியில் சுவிட்சர்லாந்து ஆக்ரோஷமாக விளையாடியது. 67ஆவது நிமிடத்தில் டான் என்டோயே, சக வீரர் றிக்கார்டோ றொட்றிகஸுடன் பந்தை நகர்த்தி வந்து ஆர்ஜென்டீனாவின் நட்சத்திர கோல் காப்பாளர் எமிலியானோ மார்டினெஸின் கால்களுக்கிடையே பந்தை செலுத்தி கோல் அடித்து போட்டியை1-1 என சமநிலைக்கு கொண்டு வந்தார்.

சிவப்பு அட்டை மற்றும் VAR சர்ச்சை (72ஆவது நிமிடம்): போட்டியின் பெரும் திருப்புமுனையாக 72ஆவது நிமிடத்தில் சுவிஸ் அணியின் பிரீல் எம்போலோ வேண்டுமென்றே பாய்ந்ததுக்காக இரண்டாவது மஞ்சள் அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார். முதலில் ஆர்ஜென்டினாவின் லியான்ட்ரோ பரேடெஸுக்கு மத்தியஸ்தர் மஞ்சள் அட்டையைக் காண்பித்திருந்தார். ஆனால், காணொளி உதவி மத்தியஸ்தர் சோதனையில் எம்போலோவுக்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டது. சுவிஸ் அணி 10 வீரர்களாக சுருங்கியது.

மேலதிக நேரத்தில் ஆர்ஜென்டினாவின் அசுர வேகம்: 90 நிமிடங்கள் வரை போட்டி 1-1 என சமநிலையில் நீடித்ததால் மேலதிக நேரம் வழங்கப்பட்டது.

112ஆவது நிமிடம்: ஆர்ஜென்டினாவின் ஜூலியன் அல்வரெஸ் மைதானத்தின் தூரத்திலிருந்து உதைத்த ஒரு அசாத்தியமான நீண்ட தூர உதை, சுவிஸ் கோல் காப்பாளர் கொபெலையும் தாண்டி வலது மேல் மூலைக்குள் தஞ்சம் புகுந்தது. ஆர்ஜென்டினா 2-1 என முன்னிலை பெற்றது.

121ஆவது நிமிடம்: போட்டியின் இறுதி நொடிகளில் தியாகோ அல்மடா அடித்த உதையை கொபெல் தடுக்க, மீண்டு வந்த பந்தை லொட்டரோ மார்டினெஸ் மிக எளிதாக கோலாக மாற்றி ஆர்ஜென்டினாவின் 3-1 வெற்றியை உறுதி செய்தார்.

வரலாற்று சாதனை நோக்கிய பயணம்: தனது 39ஆவது வயதில் 6ஆவது உலகக் கிண்ணத் தொடரில் விளையாடும் மெஸ்ஸியின் ஆர்ஜென்டினா, 1962-இல் பிரேசில் படைத்த சாதனைக்குப் பிறகு உலகக் கிண்ணத்தை தக்கவைத்துக் கொள்ளும் முதல் அணி என்ற வரலாற்றுப் பெருமையைப் பெற இன்னும் இரு வெற்றிகள் மட்டுமே தேவை.