தலவாக்கலை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட ஊட்டுவள்ளி தோட்டத்திற்குச் செல்லும் பிரதான நுழைவாயிலில் அமைந்துள்ள சுமார் 150 வருடங்கள் பழமை வாய்ந்த இரும்புப் பாலம் தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதனை உடனடியாகப் புனரமைத்து மக்கள் ப…

தலவாக்கலை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட ஊட்டுவள்ளி தோட்டத்திற்குச் செல்லும் பிரதான நுழைவாயிலில் அமைந்துள்ள சுமார் 150 வருடங்கள் பழமை வாய்ந்த இரும்புப் பாலம் தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.

இதனை உடனடியாகப் புனரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாலத்தின் பல பகுதிகள் சேதமடைந்துள்ளதுடன், அதில் பொருத்தப்பட்டுள்ள இரும்புக் கம்பிகள் மற்றும் உலோகப் பகுதிகள் முற்றிலுமாகத் துருப்பிடித்து வலுவிழந்துள்ளன. மேலும், பாலத்தில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால் அதன் பாதுகாப்புத் தன்மை கேள்விக்குறியாகியுள்ளதுடன், தற்போது ஊடான போக்குவரத்தும் தற்காலிகமாகத் தடைப்பட்டுள்ளது.

இப்பாலத்தை ஊட்டுவள்ளி, பிரேமோர், நல்லதண்ணி, உட்லெக், சின்ன தோட்டம் மற்றும் சென்றெகுலர்ஸ் உள்ளிட்ட பல தோட்டங்களைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

பாடசாலை மாணவர்கள், நோயாளிகள், கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் முதியவர்கள் எனப் பலதரப்பட்ட மக்களும் இவர்களின் அன்றாடத் தேவைகளுக்காக இந்தப் பாலத்தையே நம்பியுள்ளனர்.

போக்குவரத்துத் தடை காரணமாக நோயாளர்களை உடனடியாக வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்வது, மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்வது மற்றும் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்வது உள்ளிட்ட அத்தியாவசியப் பயணங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. வாகனச் சாரதிகளும் பொதுமக்களும் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இதனைக் கருத்திற்கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நேரில் சென்று பாலத்தைப் பார்வையிட்டுத் தொழில்நுட்ப மதிப்பீட்டை மேற்கொள்வதுடன், அவசர அடிப்படையில் புதிய பாதுகாப்பான பாலத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மஸ்கெலியா  நிருபர்