கணக்குகளைக் கைப்பற்றுதல் மற்றும் மோசடி அழைப்புகளை கட்டுப்படுத்தும் வகையில், வாட்ஸ்அப் புதிய பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.இதன்படி, தற்போது பயன்பாட்டில் உள்ள 6 இலக்க இருபக்க சரிபார்ப்பு PIN முறைக்கு மாற்றாக, கூடுதல் பாதுகாப்பு கொண்ட கடவுச்சொல் (Password) முறையைப் பய…
கணக்குகளைக் கைப்பற்றுதல் மற்றும் மோசடி அழைப்புகளை கட்டுப்படுத்தும் வகையில், வாட்ஸ்அப் புதிய பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.இதன்படி, தற்போது பயன்பாட்டில் உள்ள 6 இலக்க இருபக்க சரிபார்ப்பு PIN முறைக்கு மாற்றாக, கூடுதல் பாதுகாப்பு கொண்ட கடவுச்சொல் (Password) முறையைப் பயன்படுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்தக் கடவுச்சொல்லில் குறைந்தபட்சம் ஒரு எழுத்து மற்றும் ஒரு எண் இடம்பெற வேண்டும். மேலும், குறைந்தபட்சம் 8 எழுத்துகளைக் கொண்ட கடவுச்சொல்லை பயனர்கள் உருவாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை Settings > Account > Password பகுதிக்குச் சென்று அமைத்துக்கொள்ள முடியும்.
அதேவேளை, பயனர்கள் தங்களது பல்வேறு சாதனங்களில் பல Passkeys-களை உருவாக்கும் வசதியும் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
மேலும், அறியப்படாத எண்களில் இருந்து அழைப்புகள் வரும் போது, Android பயனர்களுக்கு அழைப்பாளர் தொடர்பான கூடுதல் தகவல்களை வாட்ஸ்அப் வழங்கவுள்ளது. குறிப்பாக, அழைப்பாளர் வெளிநாட்டைச் சேர்ந்தவரா அல்லது அவருடன் ஏதேனும் பொதுவான குழுக்களில் பயனர் இடம்பெற்றுள்ளாரா போன்ற தகவல்கள் காட்டப்படும்.
தொழில்நுட்ப ரீதியான ஹேக்கிங் தாக்குதல்களை விட, மனிதர்களை ஏமாற்றும் சமூகப் பொறியியல் (Social Engineering) முறைகளை மோசடி செய்பவர்கள் அதிகளவில் பயன்படுத்தி வருவதால், இந்த புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப்பில் 2017ஆம் ஆண்டு முதல் 6 இலக்க PIN அடிப்படையிலான இருபக்க சரிபார்ப்பு முறை நடைமுறையில் இருந்து வந்த நிலையில், தற்போது எழுத்துகள், எண்கள் மற்றும் சிறப்புக்குறிகள் அடங்கிய வலுவான கடவுச்சொல்லைத் தேர்வு செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
எளிதில் யூகிக்கக்கூடிய PIN அல்லது கடவுச்சொற்களைத் தவிர்த்து, வலுவான மற்றும் தனித்துவமான கடவுச்சொற்களைப் பயன்படுத்துவதன் மூலம் பயனர்கள் தங்களது வாட்ஸ்அப் கணக்குகளின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க முடியும்.












