வடக்கு - கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் அம்மாக்கள் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என அறியாமலே இறந்து போவது மோசமான ஒரு சம்பவம் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் வலிந்து காணமல் ஆக்கப்பட்டோருக்கான பணிக் குழு பிரதிநிதி அனா லோறினா டெல்கடிலோ பெரஸ் கவலை வெளி…

வடக்கு - கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் அம்மாக்கள் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என அறியாமலே இறந்து போவது மோசமான ஒரு சம்பவம் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் வலிந்து காணமல் ஆக்கப்பட்டோருக்கான பணிக் குழு பிரதிநிதி அனா லோறினா டெல்கடிலோ பெரஸ் கவலை வெளியிட்டுள்ளார்.

நேற்று(30.08.2026) யாழ்ப்பாணம் - தந்தை செல்வா நினைவு மண்டபத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் ஏற்பாடு செய்த சர்வதேச வலிந்து காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு “சர்வதேச நீதியை நோக்கிய பயணம்” எனும் தொனிப் பொருளில் இடம்பெற்ற சர்வதேச மாநாட்டில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பிள்ளைகளை இழந்த தாய்மார்களின் கதறல்கள்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் அம்மாக்களின் துயரங்களை நன்கு அறிவோம்.

தமது பிள்ளைக்கு என்ன நடந்தது என அறியாமலே அம்மாக்கள் இறக்கின்ற சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், உண்மைக்கும் நீதிக்குமான தேடலில் தளர்வு நிலை இருப்பதை மறுக்க முடியாது.

இதனை அறிந்த நாம் இலங்கையில் பாதிக்கப்பட்ட தரப்புகளுடன் இணைந்து வேலை செய்துவருகின்ற நிலையில், இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஆட்கள் தொடர்பில் இறுதியான எண்ணிக்கையை பெற முடியவில்லை.காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை இலங்கையில் விடுதலைப் புலிகள் காலம் மற்றும் ஜேவிபியால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பதிவுகளை நாம் சேகரித்து வைத்துள்ள நிலையில், வெள்ளை வான் காணாமல் ஆக்கப்படுதல் மற்றும் பணத்துக்காக என பல வடிவங்களில் இலங்கையில் காணாமல் ஆக்கப்படுதல் இடம்பெற்றிருக்கின்றது.

வடக்கு - கிழக்கில் அரச படைகளால் காணி இழந்த மக்கள் போராடி வருகிறார்கள், அவர்களுடைய ஆதங்களையும் கேட்டு அளித்துள்ளேன்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் இந்த சர்வதேச மாநாடு ஆனது நாம் அவர்களுடன் நெருக்கமாவதற்கும் இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்படுதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே எமது விருப்பம்.

எமக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் மனிதாபிமான ஆணை உள்ளது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதற்காக அங்கத்துவ நாடுகளை இணைக்க முடியும்.

இதுவரை 61 ஆயிரத்து 626 வழக்குகளை பதிவு செய்துள்ள நிலையில்100 மேற்பட்ட நாடுகளுக்கு அனுப்பியுள்ளதுடன், தொடர்ந்தும் வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் தொடர்கிறது.

சாட்சியங்கள் இருந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை..

முழுமையான ஆதாரங்கள் மற்றும் சாட்சிகள் இருந்தும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தரவுகளை அரச அதிகாரிகள் மறைக்க முயற்சித்தமை மட்டுமல்லாது மறைத்தும் இருக்கிறார்கள்.

அதன் பாதிப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட நபர்கள் உற்பட அவர்களின் குடும்பமும் அதன் பாதிப்பை அனுபவித்து வருகின்றனர். ஆகவே, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுப்பதில் தமது முழுமையான பங்களிப்பு தொடர்ந்து இருக்கும் என்பதை கூறிக் கொள்வதுடன், உண்மைக்கும் நீதிக்குமான தேடலில் அனைத்து தரப்பினர்களும் தமது முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும் என்றார்.

இந்த மாநாட்டில் இலங்கைக்கான அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலியா தூதரகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீதரன், ரவிகரன், ஸ்ரீநேசன் , வடக்க மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ஐங்கரநேசன், தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரட்னம் சுகாஸ், போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், ஈ பி ஆர் எல் தலைவர் சுரேஷ் பிரேம சந்திரன், உட்பட மாதகுருமார்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15