வல்வெட்டி துறையில் அமைக்கப்படுள்ள சட்டவிரோத விடுதியால் பல்வேறு சட்ட விரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நீண்ட விவாதம் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட வல்வெட்டித்துறை அமைக்கப்பட்டுள்ள…
வல்வெட்டி துறையில் அமைக்கப்படுள்ள சட்டவிரோத விடுதியால் பல்வேறு சட்ட விரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நீண்ட விவாதம் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட வல்வெட்டித்துறை அமைக்கப்பட்டுள்ள விருந்தினர் விடுதியானது வல்வெட்டித்துறை நகர சபை, கரையோர பாதுகாப்புத் திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகார சபை, மது வரித் திணைக்களம், போன்றவற்றின் சட்ட வரையறைக்குட்படாது சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத செயற்பாடுகள்கரையோர பாதுகாப்பு விதிகளை மீறி கடலுக்குள் கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அவற்றை அகற்றுமாறு அறிவிக்கப்பட்டும் இதுவரை துறை சார்ந்த அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று நீண்ட விவாதம் இடம்பெற்றது.தொடர்ச்சியாக குறித்த விடயம் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஒரு வருடத்துக்கு மேலாக விவாதிக்கப்படுவதாகவும், ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், பலரும் குற்றம் சுமத்தினர்.
இதேவேளை வல்லிபுர கோவிலுக்கு அண்மித்த பகுதியில் இந்திய நிறுவனம் ஒன்றிற்கு 25 ஏக்கர் காணி வழங்கப்பட்டு அதில் சுற்றுலா கவர்ச்சி ஏற்படுத்தும் வகையில் பல்வேறு முதலீடுகளை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், குறித்த அமைவிடம் தொடர்பிலும் நீண்ட விவாதம் ஏற்பட்ட நிலையில் பிரதேச மக்களுடன் இணைந்து இடங்களை பார்வையிட்டு இந்திய முதலீட்டு திட்டத்தை அனுமதிப்பதா இல்லையா என்றும் தீர்மானிக்கப்பட்டது.
வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி தலைமையில் காலை 9:45 மணியளவில் ஆரம்பமானது.ஒருங்கிணைப்பு குழு கூட்டம்மேலும் வீதி அமைத்தல் தொடர்பான அனுமதிகள், எல்லை நிர்ணயம் தொடர்பாக மவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதிக்காக சமர்ப்பிப்பதற்கான அனுமதியும், பருத்தித்துறை அஞ்சல் திணைக்கள காணியிலிருந்து முழுமையாக இராணுவம் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை வைப்பது என்ற தீர்மானமும், நீதிமன்றத்திற்கு காணி ஆனைவிழுந்தான் பகுதியில் வழங்குவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் மேலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்றைய வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அரச திணைக்கள அதிகாரிகள், பருத்தித்துறையை நகர சபை தவிசாளர், செயலாளர், வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளர், செயலாளர், பருத்தித்துறை பிரதேச சபை உப தவிசாளர், வடமராட்சி வடக்கு பிரதேச செயலக அதிகாரிகள், கிராமம் மட்ட அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகள் இராணுவம் காவல்துறை, கடற்படை ஆகியவற்றின் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனார்.

