ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரானில் உள்ள இராணுவ இலக்குகள் மீது அமெரிக்கப் படைகள் கடுமையான வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளன. அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, நேற்று வெள்ளிக்க…

ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரானில் உள்ள இராணுவ இலக்குகள் மீது அமெரிக்கப் படைகள் கடுமையான வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளன. அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, நேற்று வெள்ளிக்கிழமை 26ஆம் திகதி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த 25ஆம் திகதி, சிங்கப்பூர் கொடியுடன் பயணித்த 'எம்/வி எவர் லவ்லி' (M/V Ever Lovely) என்ற சரக்குக் கப்பல் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. ஓமான் நாட்டு கடற்கரையை அண்டிய ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் சேமிப்புக் கிடங்குகள் மற்றும் கடலோர ரேடார் தளங்களை அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீசி அழித்துள்ளன. ஈரானின் இந்தத் தாக்குதல், இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே எட்டப்பட்டிருந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறும் செயல் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. மேலும், சர்வதேச வர்த்தகப் பாதையில் கப்பல்களின் சுதந்திரமான போக்குவரத்தை ஈரான் அச்சுறுத்துவதாகவும் அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது. தற்போது ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்களுக்கு அமெரிக்கப் படைகள் பாதுகாப்பு வழங்கி வருகின்றன. ஈரானுடனான ஒப்பந்தத்தின் அனைத்து விதிகளும் முழுமையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய அமெரிக்க இராணுவம் தொடர்ந்து அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.