(எம்.மனோசித்ரா) பாராளுமன்றத்தில் அண்மையில் முன்வைக்கப்பட்ட உள்நாட்டு இறைவரி மற்றும் வற் வரிச் சீர்திருத்தங்கள் தொடர்பாகச் சமூகத்தில் பரப்பப்படும் வதந்திகள் முற்றிலும் தவறானவை என நிதி திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக…
(எம்.மனோசித்ரா) பாராளுமன்றத்தில் அண்மையில் முன்வைக்கப்பட்ட உள்நாட்டு இறைவரி மற்றும் வற் வரிச் சீர்திருத்தங்கள் தொடர்பாகச் சமூகத்தில் பரப்பப்படும் வதந்திகள் முற்றிலும் தவறானவை என நிதி திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், 2024ஆம் ஆண்டின் 44ஆம் இலக்க அரசாங்க நிதி முகாமைத்துவ சட்டத்தின் கீழ், 2027ஆம் ஆண்டுக்கான நிதி மூலோபாய அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் அத்தியாவசிய செலவுகளைத் திட்டமிட்டு, வீண் விரயங்களைத் தவிர்ப்பதன் மூலமே நாட்டின் நிதி ஒழுக்கத்தைப் பேண முடியும். கடந்த 2025ஆம் ஆண்டில், நாட்டின் வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3 சதவீதமாகக் குறைக்க முடிந்தது. இது 1957ஆம் ஆண்டுக்குப் பின்னர் பதிவான மிகக் குறைந்த பற்றாக்குறை நிலைமை என்பதால் நாட்டின் கடன் சுமையைக் கட்டுப்படுத்த இது பெரிதும் உதவியுள்ளது. அண்மையில் ஏற்பட்ட இயற்கை பேரிடர்கள் மற்றும் உலகளாவிய யுத்த சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், முறையான நிதி நிர்வாகம் காரணமாக மேலதிகக் கடன்களின்றி உள்நாட்டுப் பொருளாதாரத்தை ஸ்திரமாகப் பேண முடிந்துள்ளது. சிறியளவிலான வர்த்தகர்கள் அல்லது சில்லறை வியாபாரிகளுக்குப் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை. வற் வரி என்பது நுகர்வு மீதான வரியே தவிர வர்த்தகர்களின் வருமான வரி அல்ல. நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடிகளைக் கருத்திற்கொண்டே, வற் வரிப் பதிவுக்கான வருமான எல்லை 60 மில்லியனாகவே தொடர்ந்து பேணப்பட்டுள்ளது. மேலும், மென்பொருட்களுக்கு புதிதாக வரி விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கருத்துக்களும் நிராகரிக்கத்தக்கவை. உள்நாட்டுத் டிஜிட்டல் சேவை வழங்குநர்கள் ஏற்கனவே வரி செலுத்தி வரும் நிலையில், இதுவரை வற் வரிக்கு உட்படாதிருந்த வெளிநாட்டு டிஜிட்டல் தளங்கள் மற்றும் மின்னணுச் சேவைகளை வற் வரி வலையமைப்பிற்குள் கொண்டுவந்து, உள்நாட்டு வர்த்தகர்களுக்குச் சமமான மற்றும் நியாயமானதொரு சூழலை உருவாக்குவதே இந்த புதிய திருத்தத்தின் நோக்கமாகும் என்றார்.

