இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு எதிராகத் தேசிய கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்த சட்டப் போராட்டத்தில் வீரர்களுக்குச் சாதகமாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஊழியர்களாக வீரர்களைக் கருதி, முன்நிகழ் நிபந்தனையுடன் வரி விதிப்பதற்கு எ…

இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு எதிராகத் தேசிய கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்த சட்டப் போராட்டத்தில் வீரர்களுக்குச் சாதகமாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஊழியர்களாக வீரர்களைக் கருதி, முன்நிகழ் நிபந்தனையுடன் வரி விதிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரான நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய ஆயத்தால் இன்று நீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. 2024 அக்டோபரில், தேசிய கிரிக்கெட் வீரர்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ‘ஊழியர்கள்’ என வகைப்படுத்தி, அவர்களுக்கு முன் கூட்டிய தனிநபர் வருமான வரியை விதிக்க உள்நாட்டு இறைவரித் திணைக்களம் முயன்றது. தங்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஊழியர்களாகக் கருதக் கூடாது என்றும், தாங்கள் பல ஆண்டுகளாக 'சுயாதீன சேவை வழங்குநர்களாகவே' அங்கீகரிக்கப்பட்டு வந்துள்ளதாகவும் ஆண் மற்றும் பெண் கிரிக்கெட் அணிகளின் தலைவர்கள் வழக்கு தொடர்ந்தனர். ஊழியர் சேமலாப நிதியம் , ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம், பணிக்கொடை, வருடாந்த விடுமுறை மற்றும் மகப்பேறு விடுமுறை போன்ற எந்தவொரு ஊழியர் சலுகைகளும் தங்களுக்கு வழங்கப்படுவதில்லை என்பதை வீரர்கள் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினர். இந்த முந்தைய திகதியிட்ட வரியை அமல்படுத்தியதால் தங்களின் ஒப்பந்தக் கொடுப்பனவுகள் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டதாக 50-க்கும் மேற்பட்ட ஒப்பந்த வீரர்கள் சத்தியக் கடதாசிகள் மூலம் நீதிமன்றத்தில் முறையிட்டனர். வீரர்கள் வரி செலுத்துவதைத் தவிர்க்க முயல்கிறார்கள் என்ற தவறான கருத்து பொதுமக்களிடையே நிலவியதாகக் ஆண் கிரிக்கெட் வீரர்களின் சார்பாக ஆஜரான சட்டத்தரணி நிஷான் சிட்னி பிரேமதிரத்ன குறிப்பிட்டார். வீரர்கள் வரி கட்டுவதைத் தவிர்க்கவில்லை என்றும், ஊழியர்களாகத் தவறாக வகைப்படுத்தப்பட்டு வரி வசூலிப்பதை மட்டுமே எதிர்த்து வழக்காடினர் என தெளிவுபடுத்தினார். அண்மையில் உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் மூலம் 'விளையாட்டு வீரர்கள்' அதிகாரப்பூர்வமாக 'சுயாதீன சேவை வழங்குநர்களாக' வகைப்படுத்தப்பட்ட போதிலும், அந்தத் திருத்தம் மனுதாரர்களுக்குப் பொருந்தாது என இறைவரித் திணைக்களம் வாதிட்டது. எனினும், இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், இறைவரித் திணைக்களத்தின் தீர்மானத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தது. ஆண் கிரிக்கெட் வீரர்கள் சார்பில் சட்டத்தரணிகள் ஷெனாலி டயஸ், சிதத் கஜநாயக்க ஆகியோருடன் சட்டத்தரணி நிஷான் சிட்னி பிரேமதிரத்ன முன்னிலையானார்கள். பெண் கிரிக்கெட் வீரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஹர்ஷ கப்ராலுடன் விகும் ஜெயசிங்க, மணித் தசநாயக்க ஆகியோர் முன்னிலையாகினர். அரசுத் தரப்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்காக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மனோஹர ஜெயசிங்க ஆஜரானார். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் உறுப்பினர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி குவேர டி சொய்சா முன்னிலையானார்.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15